21 12 2021
India’s Omicron tally reaches 200; most cases in Delhi, Maharashtra: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்புகளின் எண்ணிக்கை 200 ஐ தாண்டியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் செவ்வாய்கிழமையன்று தெரிவித்துள்ளது.
நாட்டில், மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் அதிக எண்ணிக்கையிலான ஓமிக்ரான் பாதிப்புகள் உள்ளன. காலை 11 மணி நிலவரப்படி, இரு மாநிலங்களிலும் தலா 54 ஒமிக்ரான் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அடுத்த இடங்களில் தெலுங்கானா (20) மற்றும் கர்நாடகா (19) உள்ளன.
இந்தநிலையில், டெல்லியில் புதிதாக 6 பேருக்கும், ஒடிசாவில் 2 பேருக்கும் ஒமிக்ரான் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 5,326 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் மற்றும் 453 இறப்புகள் பதிவாகியுள்ளன. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 79,097 ஆக உள்ள நிலையில், 8,000 க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
ஓமிக்ரான் மாறுபாட்டிற்கு எதிராக இந்தியாவில் கிடைக்கும் கோவிட் தடுப்பூசிகளின் செயல்திறன் ஒரு வாரத்தில் அறியப்படும், இது தொடர்பான ஆய்வின் முடிவுகளும் வெளியிடப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவித்தார். தவிர, மருத்துவ ஆக்சிஜன் திறனை அதிகரிப்பது மற்றும் மருந்துகளின் இருப்பு உட்பட, முதல் மற்றும் இரண்டாவது அலைகளிலிருந்து கற்றுக்கொண்டதன் அடிப்படையில், எந்தவொரு அலையையும் சமாளிக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று அமைச்சர் கூறினார்.
இதனிடையே, கோவிஷீல்டு அல்லது கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸாக உள்-நாசி கோவிட்-19 தடுப்பூசிக்கான 3 ஆம் கட்ட ஆய்வை நடத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலிடம் பாரத் பயோடெக் அனுமதி கோரியுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/indias-omicron-tally-reaches-200-most-cases-in-delhi-maharashtra-386161/