கர்நாடாகாவில் 58 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 1,184 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 1,184 வார்டுகளில் காங்கிரஸ் 498 இடங்களிலும், பாஜக 437 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) 45 இடங்களிலும், மற்றவை 204 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
கர்நாடகாவில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. கர்நாடகாவில் டிசம்பர் 27ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று, இன்று (டிசம்பர் 30) முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆளும் பாஜகவை வீழ்த்தியுள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 1,184 வார்டுகளை கொண்ட 58 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 1,184 வார்டுகளில் காங்கிரஸ் 498 இடங்களிலும், பாஜக 437 இடங்களிலும், ஜேடிஎஸ் 45 இடங்களிலும் மற்றவை 204 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் 42.06 சதவீத வாக்குகளும், பாஜக 36.90 சதவீதமும், ஜேடிஎஸ் 3.8 சதவீதமும், மற்றவை 17.22 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.
166 சிட்டி முனிசிபல் கவுன்சில் வார்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கு 61 இடங்களும் பாஜகவுக்கு 67 இடங்களும், ஜேடிஎஸ் 12 இடங்களும் மற்றவைக்கு 26 இடங்களும் கிடைத்துள்ளன. 441 டவுன் முனிசிபல் கவுன்சில் வார்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கு 201 இடங்களும், பாஜகவுக்கு 176 இடங்களும் ஜேடிஎஸ்-க்கு 21 இடங்களும் கிடைத்துள்ளன. பட்டன பஞ்சாயத்துகளில் 588 வார்டுகளில், காங்கிரஸ் கட்சி 236 இடங்களிலும் பாஜக 194 இடங்களிலும் ஜேடிஎஸ் 12 இடங்களிலும் மற்றவை 135 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவக்குமார், “சமீபத்திய தேர்தல் முடிவுகள் மாநிலத்தில் காங்கிரஸ் அலை வீசுவதையும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அதற்கு உறுதியளித்துள்ளன. 2023 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எதிர்காலத் தேர்தலுக்கான அளவுகோலாக இருக்க முடியாது என்றாலும், இந்த முடிவுகள் காங்கிரஸின் சித்தாந்தம் மற்றும் அதை நம்பும் நமது மக்களின் பலத்தை உறுதிப்படுத்துகின்றன. பணப்பட்டுவாடா மூலம் வெற்றி பெறலாம் என்ற பா.ஜ.,வின் கணக்கீட்டை தகர்த்துவிட்டனர். மக்கள் சார்பு சித்தாந்தம் வெற்றி பெற்றுள்ளது” என்று அவர் கூறினார்.
இந்த வெற்றி குறித்து கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, “உள்ளாட்சி தேர்தலில் கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு மாபெரும் வெற்றி. ஆளும் பாஜகவை விட காங்கிரஸ் அதிக இடங்களை வெற்றி பெற்றிருப்பது பாஜக ஆட்சி மீதான நம்பிக்கையின்மையின் பிரதிபலிப்பாகும். இது இறுதி பொதுத் தேர்தலில் நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்பதற்கான அறிகுறியாகும்” என்று ட்வீட் செய்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/india/karnataka-urban-local-body-polls-congress-emerges-single-largest-party-than-bjp-390557/