திங்கள், 20 டிசம்பர், 2021

கேரளாவில் பதற்றம்

 19 12 2021 கேரளா மாநிலம் ஆலப்புழாவில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் கொல்லப்பட்ட சில மணி நேரங்களிலே, அதே மாவட்டத்தில் பாஜக பிரமுகர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுளஅளது.

ஆழப்புழாவில் பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன், இன்று அதிகாலை நடைபயிற்சி மேற்கொள்ள தயாராகி கொண்டிருந்த போது, அவரது
வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், சரிமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். ரஞ்சித் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார்.

முன்னதாக, நேற்றிரவு இரு சக்கர வாகனத்தில் சென்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் கே.எஸ். ஷான், மர்ம் கும்பலால் கொல்லப்பட்டார். அவரது பைக்கின் மீது முதலில் காரை கொண்டு மோதியுள்ளனர். பின்னர், காரிலிருந்து இறங்கிய அடையாளம் தெரியாத நபர்கள், அந்நபரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், கொடூரமான கொலைகளுக்குப் பின்னால் செயல்பட்டவர்கள் மீது கடுமையான காவல் துறை நடவடிக்கை இருக்கும். இத்தகைய கொடூரமான, மனிதாபிமானமற்ற வன்முறைச் செயல்கள் மாநிலத்திற்கு ஆபத்தானவை. இதுபோன்ற கொலைகாரக் குழுக்களையும் அவர்களின் வெறுப்பு மனப்பான்மையையும் கண்டறிந்து தனிமைப்படுத்த அனைத்து மக்களும் தயாராக இருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

மேலும் பேசிய ஆழப்புழா எஸ்பி ஜி ஜெய்தேவ், இந்த இரண்டு கொலைகளும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதா அல்லது பழிவாங்கும் நோக்கில் நடைபெற்றதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலைகள் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளன. சனிக்கிழமை அரசியல் பிரமுகர் கொல்லப்பட்டதும், காவல் துறை கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டத. இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை கொலையைத் தடுக்க முடியவில்லை.

SDPI தலைவர் கே.எஸ்.ஷானின் உடல் வைக்கப்பட்டுள்ள கொச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான SDPI கட்சியினர் முகாமிட்டுள்ளனர் என்றார்.

இந்தாண்டு பிப்ரவரியில், ஆலப்புழாவில் வயலார் பகுதியைச் சேர்ந்த நந்து என்ற 22 வயது ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி, எஸ்.டி.பி.ஐ மற்றும் ஆர்.எஸ்.எஸ் இடையேயான மோதலில் எஸ்.டி.பி.ஐ கட்சியினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறகு குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/india/tension-in-kerala-after-sdpi-and-bjp-leaders-killed-in-separate-incidents-385150/