30 12 2021
புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அருகில் இருந்த பள்ளி சிறுவன் துப்பாக்கி குண்டு தாக்கி படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நர்த்தமலை அருகே அம்மாசமுத்திரம் பகுதியில் மத்திய தொழில்துறை பாதுக்காப்பு படை வீரர்கள் துப்பாக்கி பயிற்சி மையம் அமைந்துள்ளது. திருச்சி மண்டலத்தை சேர்ந்த போலீசார் மற்றும் சிறப்பு காவல் படையினர் தினந்தோறும் இந்த பயிற்சி மையத்தில் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று வழக்கம்போல வீரர்கள் பலரும் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, போலீசார் ஒருவர் சுட்டத்தில் துப்பாக்கி குண்டு 2 கி.மீ தூரத்தில் வீட்டில் வாசலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனின் தலையில் பாயந்தது. இதனால் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சிறுவன் அங்கேயே மயங்கி விழுந்தான். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறுவனின் தலையில் இடதுபுறம் துப்பாக்கி குண்டு ஆழமாக புகுந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது விபத்தில் காயமடைந்த சிறுவன் புதுக்கோட்டை மாவட்டம் நர்த்தமலை அருகே உள்ள கொத்த மங்களத்துப்பட்டியை சேர்ந்த கலைச்செல்வன் என்பரின் மகன் புகழேந்தி என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் அதே பகுதியில் 6-ம் வகுப்பு படித்து வருவதாகவும் பள்ளி விடுமுறை என்பதால் நர்த்தமலையில் உள்ள தாத்தா வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் காயமடைந்த சிறுவனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி நர்த்தமலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் இந்த துப்பாக்கிச்சுடுதல் மையத்தில் இருந்து ஏற்கனவே பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடந்து சிறுவனின் உறவினர்களிடம் பேசிய போலீசார் மற்றும் அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இது தொடர்பாக இந்தியன் எக்பிரஸிடம் பேசிய கீரனூர் டிஎஸ்பி சிவசுப்ரமணியன், துப்பாக்கிச்சூடு ரேஞ்ச் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. “நாங்கள் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். தற்போது கிராம மக்கள் கலைந்து சென்றனர், அவர்களின் கூற்று உண்மையாக இருந்தால், உரிய நடவடிக்கை எடுப்போம் என்று அவர்களிடம் தெரிவித்தோம். தற்போது துப்பாக்கி சூடு வரம்பை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-11-years-old-boy-injury-for-stray-bullet-from-firing-range-in-pudukottai/