தென்காசி மாவட்டத்தின் முக்கியப் பிரச்னைகளில் ஒன்றான ராமநதி -ஜம்புநதி இணைப்புக் கால்வாய் திட்டப் பணிதான் இப்படி அரசின் கவனத்திற்காக காத்துக் கிடக்கிறது. ராமநதி என்பது, குற்றாலம்- பாபநாசம் இடையே மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகிறது. பாரதியார் மணம் முடித்த கடையம் என்கிற ஊரில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவுதான். அங்கு மலையடிவாரத்தில் ராமநதியின் குறுக்கே அணை கட்டப்பட்டிருக்கிறது.
சுமார் 4 லட்சம் கன அடி கொள் அளவு உடைய இந்த அணை, வருடம் தவறாமல் பெருகிவிடும். அணை நிரம்பியதும் அந்தத் தண்ணீர் கடையம் அருகேயுள்ள ரவண சமுத்திரம், பொட்டல் புதூர் ஆகிய ஊர்களைக் கடந்து தாமிரபரணியில் சங்கமித்து, கடலில் போய் கலக்கிறது. வருடம்தோறும் இப்படி உபரி நீர் இங்கே வீணாகிக் கொண்டிருக்க… இதே கடையம் ஒன்றியத்தின் வடக்குப் பகுதி வறட்சியால் வாடிக் கொண்டிருக்கிறது.
அதாவது, கடையம் ஊருக்கு வடக்கே கீழப்பாவூர் ஒன்றியத்தின் தென் பகுதியான பாவூர்சத்திரம் பகுதி வரை வேறு எந்த ஆற்றுப் பாசனமும் இல்லை. பாவூர்சத்திரத்திற்கு வடக்குப் பகுதி சிற்றாறு (அதுதாங்க, குற்றாலம் நீர்வீழ்ச்சி) பாசனம் மூலமாக ஓரளவு செழிப்பாகி விடுகிறது. பாவூர்சத்திரத்திற்கும் கடையத்திற்கும் இடைப்பட்ட பகுதி மட்டும் வானம் பார்த்த பூமியாக வருடம் தோறும் காய்கிறது.
இந்த வேதனையைப் போக்க உருவானதுதான், ராமநதி – ஜம்பு நதி இணைப்புக் கால்வாய்த் திட்டம். ஜம்பு நதி என்பது ராமநதிக்கும் குற்றாலத்திற்கும் இடையே மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் ஒரு சிறு நதி. இதில் ராமநதி போல தண்ணீர் பெருக்கெடுத்து வருவதில்லை. மலையில் பலமாக மழை பெய்தால், ஜம்பு நதியில் வரும் தண்ணீர், மானாவாரிக் குளங்களை நிரப்பி விவசாயத்திற்கு ஓரளவு கை கொடுக்கும்.
எனவே ராமநதியின் உபரி நீரை ஜம்பு நதியில் கொண்டு வந்து சேர்த்தால், இங்கேயும் ஒவ்வொரு ஆண்டும் மொத்தக் குளங்களும் நிரம்பி, விவசாயம் செழிக்கும். இந்த நோக்கத்தில்தான் 2015-ம் ஆண்டு ராமநதி – ஜம்புநதி இணைப்புக் கால்வாய் திட்டம் அறிவிக்கப்பட்டது.
முதல் கட்டமாக ராமநதி – ஜம்பு நதி இடையே இணைப்புக் கால்வாய் வெட்ட வேண்டிய தூரம் வெறும் 3.15 கி.மீ மட்டுமே. பிறகு ராமநதி – ஜம்பு நதி இணைந்த தண்ணீர் குற்றாலப் பேரி கால்வாய், நாராயணப் பேரி கால்வாய்கள் வழியாக குற்றாலப் பேரி குளம், நாராயணப் பேரி குளம், கைக்கொண்டார் குளம் ஆகியவற்றை நிரப்பி ஆவுடையானூர் குளம் வரை வந்து சேரும். இவை அனைத்தும் கீழப்பாவூர் ஒன்றியத்தின் தென் பகுதிகள். இங்கிருந்து கடையம் ஒன்றியத்தின் வட பகுதிகளான மைலப்புரம், புங்கம்பட்டி, பண்டாரகுளம் வரை 4.15 கி.மீ தொலைவுக்கு மற்றொரு துணைக் கால்வாய் புதிதாக அமைக்க வேண்டும். ஆக, கால்வாய் அமைக்க வேண்டிய மொத்த தொலைவு 7.30 கி.மீ.
இந்த இணைப்புக் கால்வாய்க்காக 2015-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அப்போதே ஆய்வுப் பணிக்காக ரூ40 லட்சமும், நிலம் கையகப்படுத்த ரூ5 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனாலும் நிர்வாக ரீதியிலான தாமதங்களால், நான்கரை ஆண்டுகள் கடந்து 10-3-2020ல்தான் நிலம் கையகப்படுத்த அரசாணை (எண் 80) வெளியானது.
அப்போதும் அரசு அறிவித்தபடி 7 பணியாளர்களை நியமிக்காமல், 2 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டனர். இதனால் நிலம் கையகப்படுத்தும் பணியும் கிடப்பில் போடப்பட்டது. எனினும் 2020 பிப்ரவரி 26-ம் தேதி கால்வாய் வெட்ட அரசாணை (எண் 64) பிறப்பிக்கப்பட்டது. அதே ஆண்டு ஜூன் 4-ம் தேதி கால்வாய் வெட்டும் பணிக்காக ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. இதெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கால்வாய் அமைக்க வனத்துறை அனுமதி பெறவே இல்லை. நிலம் கையகப்படுத்தும் பணியும் முடியவில்லை.
இதனால் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு (20-8-2020) பூமி பூஜை போட்டு தொடங்கப்பட்ட கால்வாய்ப் பணி, அப்படியே நின்று போனது. திமுக ஆட்சி அமைந்ததும் ராமநதி – ஜம்பு நதி இணைப்புக் கால்வாய் செயல்பாட்டுக் குழுவினர் இந்தப் பிரச்னையை அரசு கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
அதன் அடிப்படையில் மாவட்ட வனத்துறை இதற்கான பரிந்துரைகளை சென்னையில் முதன்மை வனப் பாதுகாவலர் அலுவலகத்திற்குஅனுப்பி வைத்தது. முதன்மை வனப் பாதுகாவலரும் மேல் நடவடிக்கைக்காக 23-9-2021 அன்று சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளருக்கு கோப்புகளை அனுப்பி வைத்திருக்கிறார்.
இனி முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான மாநில வனவிலங்கு வாரியம் ஒப்புதல் கொடுக்கவேண்டியது மட்டுமே பாக்கி! இதற்காக முதல்வர் ஸ்டாலின், திமுக எம்.பி கனிமொழி ஆகியோரை சந்திக்கும் முயற்சிகளை செயற்பாட்டுக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநதி- ஜம்பு நதி இணைப்புக் கால்வாய் செயல்பாட்டுக் குழு அமைப்பாளர் இராம. உதயசூரியன் இது தொடர்பாக கூறுகையில், ‘பாவூர்சத்திரத்தின் தென் பகுதி ஒரு காலத்தில் மிளகாய் வத்தல் விவசாயத்திற்கு பெயர் பெற்ற பகுதி. அதனால்தான் பாவூர்சத்திரம், தமிழகத்தின் முக்கியமான மிளகாய் வத்தல் வர்த்தக கேந்திரமாகத் திகழ்ந்தது. இந்தப் பகுதியில் சரியான பாசன வசதி இல்லாததால், விவசாயமும் பொய்த்தது. இந்த ஏரியாவின் வர்த்தகம்- பொருளாதாரமும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது.
இதையெல்லாம் மீட்க, ராமநதி-ஜம்பு நதி இணைப்புக் கால்வாய் அவசியம் தேவை. முழுக்க ராமநதியில் வீணாகும் தண்ணீரை மட்டுமே இந்தத் திட்டத்திற்கு பயன்படுத்துகிறோம். எனவே இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை. இணைப்புக் கால்வாய் வெட்டினால் இந்த 2 ஒன்றியங்களிலும் 21 குளங்கள் ஆண்டுதோறும் நிரம்புவது உறுதி செய்யப்படும். சுமார் 4050 ஏக்கர் பாசன வசதி பெறும். 784 கிணறுகள் செறிவூட்டப்பட்டு,100 கிராமங்களின் குடிநீர் தேவை ஈடு செய்யப்படும்.
இந்தத் திட்டத்திற்கான மொத்த நிதி 41.08 கோடி ரூபாய். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு 39 கோடி ரூபாயை நபார்ட் வங்கி டெப்பாசிட் செய்துவிட்டது. எஞ்சிய சிறு தொகையை மாநில அரசு ஒதுக்குவதில் பிரச்னை இருக்காது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வன விலங்கு மாநில ஆணையம் கூடி ஒப்புதல் அளித்தால் ஓராண்டில் திட்டத்தை நிறைவேற்றிவிட முடியும். இதற்கான முயற்சிகளைசெய்து வருகிறோம்’ என்றார் உதயசூரியன்.
இந்தத் திட்டத்தின் துவக்கப் புள்ளியான ராமநதி அணைக்கு திட்டம் தீட்டியவர் காமராஜர். ஆனால் கலைஞர் கருணாநிதியின் முதல் முறை ஆட்சியில்தான் திட்டம் நிறைவு செய்யப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்தது. அதேபோல அ.தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்டு இழுபறியில் நிற்கும் இந்த இணைப்புக் கால்வாய் திட்டத்தை ஸ்டாலின் நிறைவேற்றிக் கொடுப்பாரா?
source https://tamil.indianexpress.com/tamilnadu/tenkasi-ramanathi-jambunathi-link-canal-project-delay-issue-384802/