சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள முகலாயப் பேரரசர்களான ஔரங்கசீப், ஷாஜஹான் குறிப்புகளை நீக்கக்கோரி தொடர்ந்த பொதுநல வழக்கை, டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி டி என் படேல் மற்றும் நீதிபதி ஜோதி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கக்கூடியது என கூறிய நீதிபதிகள், மனுதாரர் உடனே திரும்ப பெற என எச்சரித்தது. அதனை தொடர்ந்து, இந்த பொதுநல மனு மனுதாரரால் திரும்பப் பெறப்பட்டது.
மனு விசாரணையின் போது பேசிய நீதிபதிகள், ” கோயில் பழுதுபார்ப்பு போன்றவற்றுக்கு மானியம் கொடுப்பதில் ஷாஜகானுக்கும் ஔரங்கசீப்புக்கும் அத்தகைய கொள்கை இல்லை என்பது உங்கள் பிரச்சினை என சொல்கிறீர்கள். எங்களால் மத்திய மற்றும் மாநில அரசுகளின் தற்போதைய கொள்கைகளையே தீர்மானிக்க முடியவில்லை. அப்படியிருக்கையில், ஷாஜகான் மற்றும் ஔரங்கசீப்பின் கொள்கைகள் பற்றி நாங்கள் முடிவு செய்ய வேண்டுமா? உயர்நீதிமன்றமா முடிவு செய்யும் என கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து பேசிய நீதிபதிகள், இத்தகைய பொதுநல வழக்குகள் போடுவதற்கு பதிலாக, மனுதாரர் வரி ஏய்ப்பு தொடர்பான மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் இந்திய வரலாற்றின் கருப்பொருள்கள் என்ற பகுதியில், அனைத்து முகலாய பேரரசர்களும் வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும் மானியம் வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இது ஷாஜகான் மற்றும் ஔரங்கசீப்பின் ஆட்சிக் காலங்களைக் குறிப்பிடுகிறது.
மேலும், போர்களின் போது கோயில்கள் அழிக்கப்பட்டதாகவும், பின்னர் அவற்றைப் பழுதுபார்க்க மானியங்கள் வழங்கப்பட்டதாக வாக்கியங்கள் இடம்பெற்றுள்ளன. புத்தகத்தில் கூறப்பட்டுள்ளவை உண்மையல்ல என்று நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/education-jobs/delhi-hc-refuse-to-removing-mughal-emperors-mention-in-ncert-class-12-book-383915/