செவ்வாய், 21 டிசம்பர், 2021

மேலும் 14 தமிழக மீனவர்கள் கைது… ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் காலவரையற்ற போராட்டம்

 21 12 2021 

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 55 பேரை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் நேற்று முதல் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், மேலும் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது, மீனவர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆதரவாக புதுக்கோட்டை மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 18 ஆம் தேதி மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்கு மீனவர்கள் சென்றனர். அப்போது, நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 55 பேரையும், 8 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.

தொடர்ந்து, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த இலங்கை கடற்படையினர், ராமேசுவரம் மீனவர்கள் 43 பேரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனா். மீதமுள்ள 12 பேரையும் சிறையில் அடைக்கவுள்ளனர்.

இலங்கை கடற்படையின் நடவடிக்கையை கண்டித்தும், கைது செய்யப்பட்ட மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரியும், ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினர்.துறைமுகத்தில் 780-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இவர்களது போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

மேலும், 55 மீனவர்களையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் புதன்கிழமை முதல் தங்கச்சிமடம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாகவும் மீனவ சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதற்கிடையில், இலங்கை யாழ்ப்பாண மாவட்டம் எழுவை தீவு கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்த 14 தமிழக மீனவர்களையும் அவர்களது இரண்டு மீன்பிடி விசைப்படகுகளையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்குப் பதிவு செய்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை படகுடன் கைது செய்து, விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளது.

இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தை நிறுத்தக்கோரியும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்கக்கோரி புதுக்கோட்டை மீனவர்களும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஜெகதாப்பட்டினத்தில் 1,200 மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாததால், 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

source https://tamil.indianexpress.com/tamilnadu/pudukottai-and-rameshwaran-fisheries-protest-for-release-of-fishermen-arrested-by-sri-lanka-385903/