வெள்ளி, 24 டிசம்பர், 2021

திமுக அரசு நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் எத்தனை? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

 23 12 2021 திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்ல என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துவரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக இதுவரை 300 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக புதன்கிழமை கூறினார்.

திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 500 வாக்குறுதிகளில் 300 வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியுள்ளதாகவும், மீதமுள்ள வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவதாகவும் புதன்கிழமை தெரிவித்தார்.

பெரம்பூரில் உள்ள டான் போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது அரசின் நலத்திட்டங்கள் தொடரும் என்று கூறினார். அவருடைய அரசின் செயல்பாடுகள் திமுகவுக்கு வாக்களிக்காதவர்களையும் வருந்த வைக்கும் என்று அவர் முன்னர் கூறியதை நினைவுகூர்ந்த மு.க.ஸ்டாலின், “அப்படி அவர்களும் வருந்துவார்கள், நல்ல பணி தொடரும். அதுதான் என் வேலை.” என்று கூறினார்.

மேலும், அவரை சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்த கொளத்தூர் தொகுதி எப்போதும் சிறப்பு வாய்ந்தது. “இது சுயநலம். நான் சுயநலவாதி. இந்த சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தமட்டில் நான் சுயநலவாதி.” என்று கூறினார்.

பொங்கல் பண்டிகை விழாவாக இருந்தாலும் சரி, திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளாக இருந்தாலும் சரி, வேறு எந்த விழாவாக இருந்தாலும் சரி, கொளத்தூர் வருகை தனக்கு எப்போதுமே சிறப்பானது என்று மு.க. ஸ்டாலின் கூறினார். இன்னும் மூன்று வாரங்களில் அந்தத் தொகுதியில் ‘சமத்துவப் பொங்கல்’ விழா பிரமாண்டமாக நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் இது போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபடலாம் என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை சிஎஸ்ஐ மறைமாவட்ட பிஷப், அருட்தந்தை ஜே. ஜார்ஜ் ஸ்டீபன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ராஜ்பவனில் ‘கிறிஸ்துமஸ்’ ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி: “இயேசுவின் பாடுகளை அவர் உருவாக்கிய மதிப்பீடுகளை முன்பைவிட இன்று மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில், நம் அனைவருக்குள்ளும் கிறிஸ்து வாழ்கிறார். அவர் எதற்காக தனது உயிரைக் கொடுத்தாரோ அந்தச் செய்தியை எடுத்துச் செல்வோம்.” என்று கூறினார்.

இந்த விழாவில், மயிலாப்பூர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு பேசியனார்கள்.

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிற நிலையில், திமுக அளித்த 500 தேர்தல் வாக்குறுதிகளில் 300 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-says-dmk-implemented-300-out-of-500-poll-promises-387131/