17 12 2021 முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரெய்டுகள் நடத்து வருகிறது. இதில் முக்கியமாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலரின் வீடுகளில் வரிசையாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். இதேபோல் முந்தைய ஆட்சியில் முறைகேடு செய்த அதிகாரிகளும் இந்த ரெய்டில் சிக்கியுள்ளனர்.
முன்னதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில், அவரைத் தொடர்ந்து வரிசையாக வெவ்வேறு முன்னாள் அமைச்சர்களிடம் இந்த ரெய்டு நீட்டிக்கப்பட்டது. அதிமுகவின் மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி, கேசி வீரமணி உள்ளிட்டோரின் வீடுகளிலும் ரெய்டு நடந்தது. கடைசியாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது.
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு ரெய்டு
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவரின் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சமீபத்தில் ரெய்டு நடத்தினர். சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், செங்கல்பட்டு, ஆந்திரா, கர்நாடகா என 69 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்த ரெய்டை தொடர்ந்து தங்கமணி, அவரது மனைவி, மகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளது. அவரது மகன் 2வது குற்றவாளியாகவும், மனைவி 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தங்கமணி அமைச்சகராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்ததாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சட்ட விரோதமாக சேர்த்த சொத்துக்களை அவர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளதாகவும் போலீசார் எப்ஐஆரில் தெரிவித்துள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி கண்டனம்
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை நடந்த ரெய்டு தொடர்பாக கண்டனம் தெரிவித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது கண்டனத்திற்குரியது என்றும், தி.மு.க. அரசின் சலசலப்புக்கு அஞ்சமாட்டோம் என்றும் தெரிவித்தனர்.
மேலும், “தி.மு.க.வின் இந்த பழி வாங்கும் நடவடிக்கைகளுக்கு எங்களுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் தி.மு.க. அரசு ஈடுபடாமல் நேர்மறை அரசியலை முன்னெடுத்து தேர்தலில் உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்காக நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முன்னெடுப்பை முனையுங்கள் என்று வலியுறுத்தவும் கடமைப்பட்டிருக்கிறோம்.” என்றும் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி
லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்திய பிறகு செய்தியளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, “அ.தி.மு.க.வை பழி வாங்கும் நோக்கில் தி.மு.க. செயல்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வலு சேர்க்க கூடாது என்பதற்காக இது போன்று முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைக்கு பின்னால் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளார். அவர் தி.மு.க.வில் உள்ளதால் என்னை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு உள்ளார்.
1,000 செந்தில் பாலாஜி வந்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. தி.மு.க. தலைவருக்கு செந்தில் பாலாஜியின் சுயரூபம் தெரியவில்லை. அவரை பற்றி போக போக தெரிந்து கொள்வார். எனது வீட்டில் இருந்து ரூ.2.11 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்ற தவறான தகவல் வெளியாகி உள்ளது. கிரிப்டோ கரன்சி என்றால் என்னவென்று எனக்கு தெரியாது. எனது வீட்டில் இருந்து ஒரே ஒரு செல்போனை மட்டுமே என்னிடம் கையெழுத்து வாங்கி லஞ்ச ஒழிப்பு துறையினர் எடுத்து சென்றுள்ளனர். நான் நேர்மையாக உள்ளேன். எனவே எனக்கு கடவுள் துணை இருப்பார்.” என்று தெரிவித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தல்
இந்த நிலையில், தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காணாமல் போன நிலக்கரி, கண்ணுக்கு தெரியாத கிரிப்டோகரன்சி இந்த ரெண்டுக்கும் தங்கமணி விளக்கம் சொல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது:- “அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒரு வித கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். தங்கமணி ஒருவிதமான கருத்தை வெளியிட்டுள்ளார். இவர்கள் மூவரும் கூடி ஒரே கருத்தை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் வாக்குறுதியில் ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையிலே தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்திய வரலாற்றிலே கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்த முதல் அரசியல்வாதி என்கிற பெருமையை அமைச்சர் தங்கமணி பெற்று இருக்கிறார். கண்பார்வையில் இருந்து காணாமல் போன நிலக்கரி, கண்ணுக்கு தெரிய கிரிப்டோ கரன்சி இவை இரண்டுக்கும் விளக்கம் சொல்லவேண்டிய தங்கமணி, என்ன பேசவேண்டும் என்று புரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்.
2006, 2011, 2016, 2021 ஆகிய 4 தேர்தலில் அவரின் சொத்து மதிப்பை ஒப்பிட்டு பார்த்து, அதனுடைய வித்தியாசங்கள் என்ன?, இது எங்கிருந்து வருமானம் வந்தது என்று அவர் முதலில் தெளிவுபடுத்திக் கொண்டு, அதற்குபிறகு மற்ற கருத்துக்களை சொல்ல வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.