வெள்ளி, 31 டிசம்பர், 2021

எதிர்பாராத திடீர் தாக்குதல்: சென்னையை புரட்டிப் போட்ட மழை

 31 12 2021 தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்து வருகிறது. சென்னையில், இன்று மதியம் முதல் கனமழை பெய்து வருகிறது. பகல் 1 மணியளவில் தொடங்கிய கனமழை 7 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அதிகபட்சமாக எம்.ஆர்.சி. நகரில் 18. செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக நுங்கம்பாக்கத்தில் 12 செ.மீ, நந்தனத்தில் 12 செ.மீ., மீனம்பாக்கத்தில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.


சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோரும், வாகன ஓட்டிகளும், பொதுமக்கள் என பலரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கிண்டி, தி. நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, அடையாறு, வடபழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக, சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்த விரும்பியதால் மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கனமழை காரணமாக சென்னையில் பல சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மேட்லி மற்றும் துரைசாமி சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆர்.பி.ஐ சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் கனமழை பெய்து வருவகிற நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-heavy-rain-waterlogging-orange-alert-to-4-districts-390542/