17 12 2021
திருநெல்வேலி ஜங்ஷன் அருகில் உள்ள திருநகர் பகுதியில் சாப்டர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. மாணவர்கள் மட்டும் படிக்கும் இந்த பள்ளியில் இன்று கழிவறை சுவர் இடிந்த விழுந்ததில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 மாணவர்கள் காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் சாலையில் மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். மேலும் சுவர் இடிந்து மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் அப்பகுதியில் தீ போல பரவியது. இதனால் பதற்றமடைந்த பெற்றோர்கள் பள்ளி வளாகம் முன் குவிந்தனர்.
மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள், உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து குறித்து விபத்து குறித்து விசாரணை செய்தனர். மாநகர காவல் ஆணையர் செந்தாமரைக் கண்ணன் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் சமாதானம் பேசி வீட்டுக்கு போகுமாறு அறிவுறுத்தினார்.
சுவர் இடிந்து மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி, திருநெல்வேலி முதன்மை கல்வி அதிகாரிக்கு’ பள்ளி கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டார்.
இதனிடையே மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
பாட இடைவெளியின் போது, மாணவர்கள் சிறுநீர் கழிக்க மைதானத்தில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளனர். அப்போது, கழிவறையின் முன்பக்க சுவர், எதிர்பாரதவிதமாக திடீரென இடிந்து விழுந்தது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
சுவர் இடிந்து உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாயும், காயமடைந்த 4 மாணவர்களின் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுவதாகவும் தமிழிசை தெரிவித்துள்ளார்.