பல்வேறு முஸ்லீம் அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி, கோழிக்கோட்டில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி (GHSS) புதன்கிழமை அதன் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பாலின பேதமற்ற ஒரே சீருடையை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தியது.
பாலுச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் 200 மாணவிகள் மற்றும் 60 மாணவர்கள் புதிய சீருடையான நீல நிற பாண்ட் மற்றும் கோடுபோட்ட வெள்ளை சட்டை அணிந்தனர். இந்த புதிய சீருடை அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் முயற்சியால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மாணவிகள் மற்றும் மாணவர்கள் இருபாலருக்கும் ஒரே மாதிரியான சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சீருடையை அணிய வேண்டும் என பள்ளி எந்த மாணவர்களையும் கட்டாயப்படுத்தாது என்று பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கே.ஷிபு கூறினார்.
கேரளாவில் முதல்முறையாக அரசுத் துறையில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பொதுவான சீருடை அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் பிற இடங்களில் உள்ள ஆரம்ப மற்றும் உயர் தொடக்கப் பள்ளிகளில் சில கடந்த காலங்களில் இந்த பாலின பேதமற்ற ஒரே சீருடையை ஏற்றுக்கொண்டன.
பாலின பேதமற்ற ஒரே சீருடை அமல்படுத்தப்படுவதை அறிவித்த உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் ஆர்.பிந்து, புதிய சீருடை, பாலின வேறுபாடு இல்லாமல் மாணவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று கூறினார். “சமூகத்தில் முற்போக்கான மாற்றங்களுக்கு எதிராக பழமைவாத கூறுகள் கிளர்ச்சி செய்வது மிகவும் இயல்பானது. பாலின பேதமற்ற சீருடை ஆண் மற்றும் பெண் இடையேயான பிரிவினையை அகற்ற உதவும். அனைத்து மனிதர்களும் ஒரே திசையில் முன்னேற வேண்டும் என்ற கருத்தை அளிக்கும். ஆண்களுக்கு தங்கள் ஆடையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருக்கும்போது, பெண்களும் மற்றவர்களைக் கவரும் வகையில் ஆடை அணிய வேண்டும். பெண்களுக்கு வேறு வகையான ஆடைகளை கொடுப்பது என்பது ஒரு வகையான ஏற்றத்தாழ்வுதான். புதிய சீருடை பெண்கள் தங்கள் உடலைப் பற்றி கவலைப்படாமல் நம்பிக்கையுடன் நடக்க உதவும். பாலின பேதமற்ற சீருடை பெரிய மாற்றங்களுக்கான ஒரு படியாகும்” என்று அமைச்சர் ஆர். பிந்து கூறினார்.
இருப்பினும், பாலின பேதமற்ற சீருடை பெற்றோர்களிடையே சரியான ஆலோசனை இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் குற்றம் சாட்டி பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் பள்ளிக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. கந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் தலைமையிலான சன்னி பிரிவைச் சேர்ந்த சன்னி மாணவர் சம்மேளனத்தின் தலைமையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
source https://tamil.indianexpress.com/india/kerala-govt-school-adopts-gender-neutral-uniforms-but-muslim-groups-protest-384255/