18 12 2021 நேற்று ஒரே நாளில் 26 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது. இதனை சுட்டிக்காட்டிய ஐசிஎம்ஆர் தலைவர் பால்ராம் பார்கவா, அத்தியாவசியமற்ற பயணங்கள் மற்றும் அதிகளவிலான மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ” கேரளாவில் ஒன்பது, மணிப்பூரில் எட்டு உட்பட ஏழு மாநிலங்களில் உள்ள 24 மாவட்டங்களில் வாரந்திர கொரோனா உறுதி எண்ணிக்கை 5 விழுக்காடாக உள்ளது. அங்கு உள்ளூர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும்.
திருவனந்தபுரம், கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், எர்ணாகுளம், கொல்லம், வயநாடு மற்றும் பத்தனம்திட்டாவுடன் கேரளா முதலிடத்தில் உள்ளது.
ஐரோப்பா நாடுகளில் ஒமிக்ரான் அதிவேகமாக பரவி வருவதால், மக்கள் தேவையற்ற பயணங்கள் தவிர்க்க வேண்டும். கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கலாம். வரவிருக்கும் புத்தாண்டு கொண்டாடத்தில் மிகவும் பாதுகாப்புடன் கொண்டாட வேண்டியது முக்கியமாகும்” என்றார்.
ஒமிக்ரான் பரவல் வேகம் கணிக்கமுடியாத அளவில் உள்ளது. சுமார் 91 நாடுகளில் 27 ஆயிரம் பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் இதுவரை 113 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. நேற்று ஒரே நாளில் டெல்லியில் 12 பேருக்கும், மகாராஷ்டிராவில் 8 பேருக்கும், குஜராத், தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் தலா 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பை சேர்ந்த அகர்வால் கூறுகையில், “ஒமிக்ரான் முந்தைய மாறுபாடுகளுடன் நாம் கணிக்க முடியாத வேகத்தில் பரவுகிறது. மக்கள் ஒமிக்ரானை லேசானது என்று நிராகரிப்பது கவலையை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கு கீழ் குறைவாக இருந்தாலும், மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம். தினசரி நேர்மறை விகிதம் (0.59 சதவீதம்) கடந்த 74 நாட்களாக 2 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
நாட்டில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கையில், கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் தான் தலா 10,000 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் விகே பால், ” தற்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும். மொத்த பாதிப்பு நிலையாக இருந்தாலும், சில மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருகிறது. அங்கு, சில கட்டுப்பாடுகளை மேற்கொள்ளலாம். பரவலை கட்டுப்படுத்த நோய் பாதிப்பாளருடன் தொடர்பில் இருந்தவரை கண்டறிதல், தனிமைப்படுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.
ஐரோப்பாவில் ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இங்கிலாந்தில் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையை, இந்தியாவின் மக்கள் தொகையுடன் கணக்கிட்டால், அங்கு ஏற்படும் 80 ஆயிரம் பாதிப்பு இந்தியாவில் 14 லட்சமாக அதிகரிக்கலாம்” என எச்சரித்தார்.
source https://tamil.indianexpress.com/india/seeks-curbs-in-24-districts-with-high-positivity-warns-government-384714/