வெள்ளி, 24 டிசம்பர், 2021

இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க தொடர் கோரிக்கை: புதிய கமிட்டி அமைத்த தமிழக அரசு

 24 12 2021 Rtd Justice Authinathan panel : தமிழக அரசு ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆதிநாதன் தலைமையில் 6 பேர் அடங்கிய குழு ஒன்றை நியமித்து மனிதாபிமான மற்றும் நன்னடத்தை காரணமாக கைதுகள் விடுதலை செய்வது தொடர்பாக பரிந்துரைகளை வழங்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மனநல மருத்துவ இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநர், சிறைத்துறை தலைமை நன்னடத்தை கண்காணிப்பாளர், உளவியலாளர் மற்றும் மூத்த குற்றவியல் வழக்கறிஞர் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை மற்றும் சீர்திருத்த சேவைகள் துறையில் இருக்கும் மூத்த அதிகாரி இந்த கமிட்டியின் உறுப்பினர் செயலாளராக செயல்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இருக்கும் வழிமுறைகளின் படி சிறையில் இருந்து விடுதலை செய்ய முடியாத, 10 அல்லது 20 ஆண்டுகள் வரை ஆயுள் தண்டனை அனுபவித்த கைதிகள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை விடுதலை செய்வது குறித்து இந்த கமிட்டி பரிந்துரை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், நடைமுறையில் இருக்கும் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை ஆய்வு செய்து தங்களின் பரிந்துரைகளை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாளை ஒட்டி 700 ஆயுள் தண்டனைக் கைதிகளை அவர்களின் தண்டனை காலம் முடிவதற்கு முன்பே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது. பல ஆண்டுகளாக சிறையில் தண்டனை பெற்று வரும் இஸ்லாமியர்கள் பலரும் இதன் மூலம் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இஸ்லாமியர்கள் விடுதலை செய்யப்படவில்லை. இது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அதே போன்று நோய்வாய்ப்பட்ட பல கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. ஆனால் நோய்வாய்ப்பட்ட சிறைக்கைதிகளும் விடுதலை செய்யப்படவில்லை.

இந்நிலையில் இஸ்லாமியர்கள் நீண்ட வருடங்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகும், சிறையில் தண்டனை அனுபவித்து வருவது தடுக்கப்பட வேண்டும் என்று இஸ்லாமிய குழுக்கள்ள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை அறிவித்தனர். கொளத்தூர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இஸ்லாமியர்கள் விடுதலை செய்யப்படும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும், மத ரீதியாக திட்டங்களை அணுகுவதில் பாஜகவை போன்றே திமுகவும் செயல்படுகிறது. முந்தையை ஆட்சியில் அதிமுகவும் இப்படியே செயல்பட்டது என்று கூறி கடுமையாக சாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டி மூலம் இஸ்லாமியர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/rtd-justice-authinathan-panel-set-up-to-make-recommendations-for-release-of-convicts-387521/