வியாழன், 23 டிசம்பர், 2021

நாம் தமிழர் கூட்டத்தில் புகுந்த தி.மு.க-வினர்: அடிதடி- ரகளை

 22 12 2021 

DMK cadres fights with Naam Tamilar Katch cadres, DMK, Dharmapuri, Morappur DMK cadres, NTK Dharmapuri protest stage, நாம் தமிழர் கட்சி, சீமான், நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் புகுந்த திமுகவினர், தருமபுரி, அரூர், மொரப்பூர் திமுக நிர்வாகி, நாம் தமிழர் கட்சி மேடையில் திமுகவினர் ரகளை, சீமான், சீமான் கண்டனம், NTK, DMK NTK cadres clash, Tamilnadu politics, Arur, Morappur, Seeman condemns, seeman

அரூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது திமுகவினர் புகுந்து தடுத்ததால் அடிதடி ரகளை ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தருமபுரி மாவட்டம், அரூரில் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென, மேடை ஏறிய திமுக ஒன்றிய செயலாளர் மொரப்பூர் செங்கண்ணன், என்ன பேசுற என்று தடுத்து ஹிம்லர் பேச்சை நிறுத்தச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, மேடையில் இருந்த நாம் தமிழர் கட்சியினரும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், மேடையில் இருந்த மைக் செட்டை தள்ளிவிட்ட செங்கண்ணன், மரியாதையாக பேசுங்கள், அரசியலை அரசியலாக பேசுங்கள் என்று எச்சரிக்கிறார்.

இதனிடையே, மேடைக்கு கீழே இருந்த சிலர், பிளாஸ்டிக் நாற்காலியைத் தூக்கி மேடையில் இருந்த நாம் தமிழர் கட்சியினர் மீது வீசியதால் இருதரப்புக்கும் இடையே அடிதடி ஏற்பட்டதால் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது, அங்கெ பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இருதரப்பையும் விலக்கி அனுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில், நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் பேசிக்கொண்டிருந்தபோது, திமுக மொரப்பூர் ஒன்றிய செயலாளர் மேடையில் ஏறி என்ன பேசுற, மரியாதையா பேசுங்க என்று சொல்கிறார். அப்போது நாம் தமிழர் கட்சியினருக்கும் திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. அப்போது, கீழே இருந்து ஒருவர் பிளாஸ்டிக் நாற்காலியைத் தூக்கி மேடையில் இருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது வீசுகிறார். பின்னர், காவல்துறை வந்து இரு தரப்பினரையும் கைகலப்பில் இருந்து தடுத்து அனுப்புகிறார்கள். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில் திமுகவினர் புகுந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிகாரத்திமிரில் அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றும் திமுகவினரின் செயல் வெட்கக்கேடானது என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தருமபுரி மாவட்டம், அரூரில் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைகோரி நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் வன்முறைக்கும்பல் அத்துமீறி உள்நுழைந்து, மேடையை உடைத்து, கட்சியின் நிர்வாகிகள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்த முற்பட்டதும், அதனைக் காவல்துறையினர் கைகட்டி நின்று வேடிக்கைப் பார்த்ததும் கடும் கண்டனத்திற்குரியது.

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் திமுகவினரின் இப்போக்கு கோழைத்தனத்தின் உச்சம். வடமாநிலங்களில் பாஜக செய்யும் அதேவகையிலான வன்முறையையும், சனநாயகத்திற்கு எதிரானக் கொடுங்கோல் போக்கையும் ஏவிவிடும் திமுகவினரின் செயல் இழிவானது. அதிகாரத்திமிரிலும், ஆட்சி தந்த மமதையாலும் காவல்துறையைக் கைவசம் வைத்துக்கொண்டு அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றும் திமுகவினரின் செயல் வெட்கக்கேடானது.

நாம் தமிழர் கட்சியின் மேடையை உடைத்து, கட்சியின் நிர்வாகிகள் மீது வன்முறை வெறியாட்டத்தை ஏவிவிட்ட திமுகவினரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் மேடையில், திமுகவினர் புகுந்து ரகளை செய்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், நாம் தமிழர் கட்சியினர் பொது மேடையில் பேசும்போது அரசியல் நாகரிகத்துடன் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

அண்மைக் காலமாக, நாம் தமிழர் கட்சியினர் சமூக ஊடகங்களில், பொதுக்கூட்டங்களில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திமுகவை கடுமையாக விமர்சித்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-cadres-fights-with-naam-tamilar-katch-cadres-in-dharmapuri-protest-stage-386627/