உச்சத்தில் பணவீக்கம்
குடும்பங்களுக்கு
குடும்பங்களில் சில்லறை பணவீக்கம் 4.91 சதவீதமாக இருக்கிறது. இதில் எரிபொருள் சார்ந்த பணவீக்கம் 13.4 சதவீதமாக உள்ளது. இதில் சாண்டாவின் பரிந்துரைப் படி உங்களுக்கு அகவிலைப்படி மற்றும் வீட்டு வாடகையை நீங்கள் வேலை செய்யும் நிறுவனமே தர வேண்டும். அது மட்டுமல்ல, மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களை கூட வேலை தருபவரே செலுத்துமாறு அமையும் வேலைகளை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு
விவசாயிகள் தங்கள் நிலத்தை பெருநிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கும் சுதந்திரம், அவர்களிடம் கடன் வாங்கும் சுதந்திரம், விளைபொருட்களை அவர்களுக்கே விற்கும் சுதந்திரம் மற்றும் விவசாயிகளை நிலமற்ற விவசாயத் தொழிலாளியாக மாற்றுவதற்கான சுதந்திரம் போன்றவற்றை சாண்டா நமக்கு அளிக்கிறார். ஆனால் இவற்றை ஏற்றுக்கொள்ள விவசாயிகள் மறுத்து விட்டது வேறுவிஷயம்.
அனைத்து உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு
மொத்த விலையை நிர்ணயிப்பதில் பணவீக்கம் 14.23 சதவீதமாக உள்ளது. இதிலிருந்து அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டதை அறிய முடிகிறது. ஒரு பொருளின் விலை குறைந்து விட்டால் நீங்கள் அதிஷ்டசாலி என நினைக்கலாம். ஆனால் சந்தையை சற்றே திரும்பிப் பார்த்தால் மற்ற ஐந்து பொருட்களின் விலை உயர்ந்திருக்கும். இதனால்தான் இன்றைய மொத்த பணவீக்கம் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிகமாக இருக்கிறது.
இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு
மொத்த வேலைவாய்ப்பின்மை 7.8 சதவீதமாக இருந்தாலும் நகர்ப்புறங்களில் வேலை வாய்ப்பின்மை 9.09 சதவீதமாக இருப்பதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் புள்ளிவிபரம் வெளியிட்டுள்ளது.
முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு
இந்தியாவின் மத்திய பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் மற்றும் இந்திய மேலாண்மை பல்கலைக்கழகங்களில் பத்தாயிரத்துக்கும் அதிகமான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பேராசிரியர்களின் பணி மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி கற்பிப்பதாகவே இருக்கும். ஆனால், பேராசிரியர்கள் இல்லாமலேயே எப்படி கற்பிப்பது என்பதை இவர்கள் கண்டு பிடித்திருப்பது நமக்கெல்லாம் அதிர்ஷ்டம் தான்.
புதிய இட ஒதுக்கீடு திட்டம்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு
இந்திய பல்கலைக் கழகங்களில் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 4,126 பதவிகள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு ‘ஒதுக்கீடு’ செய்யப்பட்டுள்ளன. எனவே இடஒதுக்கீடு தொடர்வது நமக்கு தெரிகிறது. நாம் அஞ்சத் தேவையில்லை. இடஒதுக்கீடு கொள்கை அவர்களின் நலனுக்காக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்படும் பதவிகளில் இட ஒதுக்கீடு இல்லை. காலியிடங்களில் மட்டுமே இட ஒதுக்கீடு இருக்கிறது. அரசு அதிக காலியிடங்களை உருவாக்கி அந்த காலியிடங்களை ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு ஒதுக்க வேண்டும். இடஒதுக்கீட்டுக் கொள்கை மதிக்கப் பட வேண்டும். வேலை வேண்டும் விண்ணப்பதாரர் அவர் வேலைக்கு விண்ணப்பிக்கும் போதே அவர் எந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்கிறார் என்பதை குறிப்பிடும் நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும்.
மாதாந்திர தவணை செலுத்துபவர்களுக்கு
மாதாந்திர தவணை செலுத்துபவர்களுக்கு அதிக வட்டிவிகிதம் உள்ளது. அதே நேரத்தில் வங்கிகள் 2020-21ல் மட்டும் ரூ.2,02,783 கோடி ரூபாய் பணத்தை தங்களிடம் கடன் வாங்கியவர்களிடம் இருந்து வசூல் செய்ய முடியாமால் தள்ளுபடி செய்துள்ளதை பார்க்க முடிகிறது. கடன் வாங்குபவர்கள் கடன் வழங்கும் வங்கிகளுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
ஏழைகளுக்கு
இங்கு ஏழைகளுக்கு ஒரு வரிசை உண்டு. ஆனால் அந்த வரிசையில் உங்களுக்கு எதுவும் கிடைக்காது. பொதுத்துறை வங்கிகள் (PSB) பெருநிறுவனங்களுக்கு உதவுவதில் மும்முரமாக உள்ளன. 2020-21 ஆம் ஆண்டில் மட்டும் 13 பெருநிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.4,86,800 கோடி பாக்கி வைத்துள்ளன.இதில் ரூ.1,61,820 கோடியை மட்டும் வங்கிகள் பெற்றுக் கொண்டு பெருநிறுவங்களை காப்பாறியதும் நடந்தது. இதை மட்டுமே பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 2,84,980 கோடி நஷ்டம். மக்கள் பணத்தை பெருநிறுவனங்கள் கைப்பற்றுவதில் பொதுத்துறை வங்கிகளும் ஒத்துழைக்கின்றன. வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்தால் உங்களுக்கு பொதுத்துறை வங்கிகள் இன்னும் அதிக நன்மைகள் செய்ய தயாராகவே இருக்கின்றன.
பொருளாதார நிபுணர்கள் மற்றும் பொருளாதார மாணவர்களுக்கு
வேகமாக சகஜ நிலைக்கு வரும் பொருளாதார நிகழ்வே ‘V’ வடிவ மீட்பு. தாங்கள் இந்த வடிவத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுத்து விட்டதாக அரசு சொல்கிறது. ஆனால் இது விரைவில் அரசை விட்டு வெளியேறும் தலைமைப் பொருளாதார ஆலோசகரின் உயர் அதிகாரத்தின் பேரில் தான் சொல்லப் பட்டது. டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் இருந்து இந்திய அரசாங்கத்திற்கு ஒரு படிப்பினையை கொடுத்துள்ளார். இந்த படிப்பினையை அவர் அரசிடம் இருந்து இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸுக்கு மீண்டும் திரும்பப் பெறுவார் என்பது தான் இதில் சுவாரஸ்யமான விஷயம்.
அதே நேரத்தில் அனைத்துலக நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்ட டாக்டர் கீதா கோபிநாத், கடந்த வாரம் டெல்லியில் இருந்த போது இந்தியப் பொருளாதார மீட்சியை ‘K’ வடிவமாக விவரித்தார். அதாவது ஒருபுறம் சமத்துவமற்ற பாகுபாடும் இன்னொரு புறம் தனிச் சலுகைகளுடனானன சிறப்புரிமையும் கொண்ட பொருளாதாரத்தை தான் இப்படி குறிப்பிடுவர். நாம் இது குறித்து வேதனைப்பட வேண்டாம். காரணம் ஆங்கிலத்தில் 24 எழுத்துக்கள் உள்ளன. அனுபவத்தின் அடிப்படையில் நன்னம்பிக்கை கொண்டவர்கள் ‘I’ என்ற எழுத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். இன்மைக் கொள்கையை கடைப்பிடிக்கும் சந்தேக புத்தி கொண்ட நிகிலிஸ்ட்டுகள் ‘O’ என்ற எழுத்தைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்மால் கணிக்க முடியும். ஆனால் பொருளாதார மேதைகள் ‘M’ என்ற எழுத்திற்கு ஆதரவாகவே வாதிடுவார்கள்.
சுதந்திரத்திற்கு சாட்சி
பத்திரிகை சுதந்திரம்
உலகப் பத்திரிக்கை சுதந்திரக் குறியீட்டில் இந்தியாவுக்கு ஒரு தரவரிசை உண்டு. பத்திரிகை சுதந்திரத்தில் கடந்த வருடம் 142வது இடத்தில் இருந்த நாம் இன்று 140வது இடத்தை பிடித்து முன்னேறி இருக்கிறோம். இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் இதை எப்படி எடுத்துக் கொள்கிறார்? இந்த புள்ளி விபரங்களை தரும் பத்திரிக்கையாளர்களை அவர் ஏற்றுக்கொள்ள வில்லை என்றே தோன்றுகிறது. பத்திரிக்கை சுதந்திரம் பற்றி அவருக்கு ஒன்று அல்லது இரண்டு விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். ‘கோலி மாரோ’ மற்றும் ‘ஹரா வைரஸ்’ போன்ற போர் முழக்கங்களை இந்தியாவின் ஊடகங்கள் சொல்லிக்கொண்டிருந்த வரை இங்கே பத்திரிகை சுதந்திரம் இருந்தது . இதற்கு ஏகப்பட்ட சான்றுகள் உள்ளன. ஆனால் பத்திரிகை சுதந்திரம் குறித்து இங்கு தெளிவான வரையறை இல்லை’ என்றும் அமைச்சர் அவர் கருத்தை நியாயப்படுத்துகிறார். சாண்டாவின் பரிந்துரையின் படி பின் வரும் பத்திரிக்கையாளர்களை அழைத்து தான் இவர் பத்திரிக்கை சுதந்திரம் குறித்து கருத்து கேட்க வேண்டும். அவர்கள் பெயர் பின்வருமாறு: ராஜ்தீப் சர்தேசாய், பர்கா தத், கரண் தாப்பர், சகாரிகா கோஸ், பரஞ்சோய் குஹா தாகுர்தா, ராகவ் பால், பாபி கோஷ், புண்யா பிரசூன் பாஜ்பாய், கிருஷ்ண பிரசாத், ரூபின், பிரணாய் ராய் மற்றும் சுதிர் அகர்வால்.
அனைத்து மக்களுக்கும்:
மக்களிடம் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகளிடம் ஊட்டச்சத்து இல்லாதது, வளர்ச்சி குன்றிய நிலை மற்றும் குழந்தை இறப்பு ஆகியவற்றை நாம் கொள்கையளவில் உறுதி செய்ய வேண்டும். உலகளாவிய பட்டினி குறியீட்டில் இருக்கும் நாடுகளில் முக்கியமானவை 116 நாடுகள். இதில் 101 வது இடத்தை அவர்கள் இந்தியாவுக்குப் பெற்று தந்துள்ளனர். அத்துடன் இந்திய தம்பதிகளின் மொத்த கருவுறுதல் விகிதம் 2.0 ஆகக் குறைவதையும் நாம் உறுதி செய்துள்ளோம். இது முந்தைய கால பெண்களின் கருவுறுதல் விகிதத்தை விட குறைவு.
மொழிபெயர்ப்பு த. வளவன்
source https://tamil.indianexpress.com/opinion/this-years-final-prizes-p-chidambaram-speaking-388875/