ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

ராகுல் டி-சர்ட்டை

 

நடை பயணத்தில் ராகுல் காந்தி அணிந்த டி.சர்டின் விலை 40 ஆயிரம் என பாஜக கிண்டல் செய்த நிலையில், பிரதமர் மோடி அணியும் உடை 10 லட்சம், கூலிங் கிளாஸ் ஒன்றரை லட்சம் என காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ,முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகனுமான ராகுல் காந்தி எம்.பி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். செப்டம்பர் 7 ஆம் தேதி , கன்னியாகுமரியில் இந்த பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கினார். இந்த யாத்திரை காஷ்மீரில் நிறைவடைகிறது. 3,570 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபயணத்தில் மக்களைச் சந்தித்து உரையாட இருக்கிறார்.150 நாட்களில் , 12 மாநிலங்கள் ,2 யூனியன் பிரதேசங்கள் வழியே பயணிக்கிறார். 150 நாட்களான இந்த பயணத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்திய தேசியக் கொடியை கொடுத்து இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் இறையாண்மையும், அரசியலமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி குமரி முதல் காஷ்மீர் வரை இந்த பயணம் 150 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்நிலையில் பாஜகவின் சமூக வலைதள பக்கங்களில் நடை பயணத்தில் ராகுல் காந்தி அணிந்துள்ள டி-ஷர்ட்டின் விலை ரூ.41,257 என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு ஆங்கிலம் கலந்த இந்தியில் ‘பாரத், தேக்கோ’ என கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. “பாருங்கள் இந்தியா” என்பதே இதன் தமிழாக்கம். 41ஆயிரம் என பதிவிடப்பட்டிருந்தது.

இதற்கு காங்கிரஸ் கட்சி தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, பேசும் போது, ராகுலின் நடைபயணம் நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் நடைபயணத்தில் குவிந்து ஆதரவளித்தனர். ராகுல் வெறும் அரசியல் லாபத்திற்காக , இந்தப் பயணத்தைத் தொடங்கவில்லை. இந்திய மக்களின் ஒற்றுமைக்காகத் தான் நடக்கிறார் என்றார்.

திருப்பூரில் உள்ள கோல்டன் ஐஸ் நிறுவனத்தினரால், தயாரிக்கப்பட்ட டி-சர்டைத்தான் ராகுல் காந்தி அணிந்துள்ளார். நடைபயணத்தில் கலந்துகொள்ளும் தோழர்களுக்காக , இருபது ஆயிரம் , டீ – சர்ட்களை வாங்கியுள்ளோம். தோழர்கள் பயன்படுத்தும் டீ- சர்ட்டில் தலைவர்களின் படங்கள் அச்சிடப்பட்டுள்ளது. ராகுலுக்காக 4 டீ-சர்ட்கள் படங்கள் இல்லாமல் அச்சடிக்கப்பட்டன. ராகுல் அணியும் டீ-சர்டின் விலை 40 ஆயிரம் ரூபாயும் இல்லை. 4 லட்சம் ரூபாயும் இல்லை. பிரதமர் மோடி தான் பத்து லட்சம் ரூபாயில் கோட், ஒன்றரை லட்சம் ரூபாயில் கூலிங் கிளாஸ் அணிந்து உள்ளார் .ராகுலுக்கு ஆதரவளித்ததை பாஜக வினர் தாங்க முடியாமல் அவதூறு பரப்புகின்றனர் என்றார்.

இந்த நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி  டி.சர்டின் சர்ச்சை குறித்து பேசுகையில் , ராகுல் காந்தியின் நடைபயணத்திற்கு நல்ல ஆதரவு கிடைக்கிறது. ராகுல் காந்தி என்ன சட்டை அணிகிறார், என்ன பனியன் அணிகிறார், அதன் விலை என்ன என்பதை கணக்கிடுவதா? பாஜகவின் வேலை, பாஜக மலிவான அரசியலில் ஈடுபட்டுள்ளது என்றார்.

இந்நிலையில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற இளைஞர்கள் அணிந்துள்ள டீ சர்ட்டில் ‛வேலைக்காக நடக்கிறேன்’ (I am walking for job)  என எழுதப்பட்டுள்ளது. இதுதொடர்பான படம் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதனிடையே திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி, மஹுவா மொய்த்ரா,
“எதிர்க்கட்சியினர் அணியும் உடைகள் மற்றும் உடைமைகள் தொடர்பாக தனிப்பட்ட முறையில் எல்லை மீறி கருத்துக்களை தெரிவிக்காதீர்கள். நினைவில் கொள்ளுங்கள். இதேபோல் பாஜக எம்பிக்கள் அணியும் கடிகாரம், பேனா, ஷூ, மோதிரம் குறித்து பேசினால், இந்த விளையாட்டை தொடங்கிய நீங்கள் வருத்தப்படுவீர்கள் என பதிவிட்டுள்ளார்

ராகுலின் நடைபயணத்தில் ஏதாவது குறைகள் தென்படுகின்றனவா என ஆராய்ந்த பாஜக , டீ-சர்டின் விலை குறித்து விமர்சனம் செய்ய அதற்கு காங்கிரசின் பதிலடியுடன், திரிணமூல் காங்கிரசின் எம்.பி மொய்த்ரா வரை சென்றது யாரும் எதிர்பாராதது. இது தான் தேன் கூட்டில் கை வைத்த கதை என்றால் மிகையில்லை.

-தங்கபாண்டியன்

source https://news7tamil.live/bjp-mocked-rahul-t-shirt-congress-retaliated.html