திங்கள், 5 செப்டம்பர், 2022

என்.எல்.சி-யை மூடுவோம்; ராணுவம் வந்தாலும் எங்களை தடுக்க முடியாது: அன்புமணி ராமதாஸ் பேச்சு

 என்.எல்.சி-யை மூடுவோம்; ராணுவம் வந்தாலும் எங்களை தடுக்க முடியாது: அன்புமணி ராமதாஸ் பேச்சு

என்எல்சி நிறுவனம் அமைய, நிலம் கொடுத்த மக்களுக்கு வேலை கொடு என்பதை வலியுறுத்தி பாமக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார்.

அன்புமணி ராமதாஸ் பேச்சு

அப்போது அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “தமிழர்களுக்கு துரோகம் செய்த என்எல்சி எங்களுக்கு தேவையில்லை. இந்த நிறுவனத்தை நிரந்தராக மூட வேண்டும். காரணம், 63 ஆண்டுகளாக இந்த மக்களை என்எல்சி ஏமாற்றிவருகிறது. கடலூர் மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தட்டி நீர் 8 அடியாக இருந்தது.

தற்போது ஆயிரம் அடியாக நீர் உள்ளது. ஏனெனில் பழுப்பு நிலக்கரி எடுக்க ராட்சத பம்புகளை வைத்து நீரை எடுத்து கடலுக்கு அனுப்புகின்றனர். கடந்த 63 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கொடுத்தவர்களுக்கு கூட இன்னமும் வேலை கொடுக்கவில்லை.

மு.க. ஸ்டாலின் வாக்குறுதி

ஏற்கனவே உள்ள நிலத்தில் இன்னும் கூடுதலாக நிலக்கரி எடுக்கலாம். ஆனால் கூடுதலாக 25 ஏக்கர் நிலம் எடுக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசு உதவி செய்கிறது.

சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு இங்கு பரப்புரை செய்த மு.க. ஸ்டாலின் ஏற்கனவே வேலை கிடைக்காத நபர்களுக்கு வேலை கொடுப்போம், மேலும் கூடுதல் நிலம் எடுக்க விட மாட்டார் என்றார். ஆனால் தற்போது அதற்கு மாறாக செயல்படுகிறார்.

பாலைவனமாக மாறிவிடும்

மேலும் என்எல்சி நிறுவனத்தில் பணிக்கு வேற்று மாநிலத்தை சேர்ந்தவர்கள் சேர்கிறார்கள். தமிழர்களுக்கு பணி மறுக்கப்படுகிறது. அதனால்தான் தமிழ்நாட்டுக்கும், கடலூருக்கும் என்எல்சி தேவையில்லை. ஏனெனில் இந்த நிலை தொடர்ந்தால், கடலூர் மாவட்டம் பாலைவனமாக மாறிவிடும்.

பாரிஸ் கால நிலை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி பழுப்பு நிலக்கரியை 2050ஆம் ஆண்டுக்கு மேல் எடுக்க முடியாது. மேலும் 2030க்கு மேல் பழுப்பு நிலக்கரியை எடுக்க முடியாது.
விவசாயம், சுற்றுச்சூழல் உள்ளிட்டவற்றை அழித்து எங்களுக்கு வளர்ச்சி என்பது வேண்டாம். இது ஒரு அடையாள போராட்டம்தான்” என்றார்.

ராணுவமே வந்தாலும்..

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு அன்புமணி ராமதாஸ் பதிலளித்தார். அப்போது, “தேர்தலுக்கு முன்பு நிலம் எடுக்க விடமாட்டோம் என்கிறார்கள். தேர்தலுக்கு பின்பு நிலம் எடுக்க அனுமதிக்கின்றனர். இது ஆர்ப்பாட்டம்தான், அடுத்து மக்களை திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம்” என்றார்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் மக்களிடையே பேசுகையில், “எங்கப் பார்த்தாலும் இந்திகாரர்கள்தான் உள்ளனர். நீ வேண்டாம், எங்களுக்கு வேண்டாம் யா. நாங்கள் என்எல்சியை பூட்டுப் போடுவோம். ராணுவமே வந்தாலும் நாங்கள் பூட்டுப் போடுவோம்” என்றார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/anbumani-ramadoss-led-pmk-protest-demanding-closure-of-nlc-in-cuddalore-505009/

Related Posts: