தனியார் மருத்துவமனைகளின் கொரோனா சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்க முடியுமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா பாதித்தவர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்க உத்தரவிடகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேரிடர் மேலாண்மை சட்டப்படி, பேரிடர் காலத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை செலவை சம்பந்தப்பட்ட மாநில அரசே ஏற்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதிகள், தனியார் மருத்துவமனைகளில், சிகிச்சை செலவை அரசே ஏற்க முடியுமா என்றும், அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் அளிக்க ஏதேனும் வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா? எனவும் கேள்வி எழுப்பினர். இது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்து தெரிவிக்கவும் தமிழக அரசுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.