கொரோனா வைரஸ் பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெ. அன்பழகன் சிக்ச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரான ஜெ. அன்பழகன் கடந்த 2ம் தேதி அன்று மூச்சு திணறல் காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர். பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் அவர் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நலம் குறித்து கடந்த வாரம் அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம் அன்பழகனுக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை இருப்பதால் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டிருப்பதாகவும் 80% வெண்டிலேட்டர் உதவியுடனே அவர் மூச்சுவிடுவதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனை நிர்வாகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகனின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர், ஜெ. அன்பழகனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். மேலும் 40% வெண்டிலேட்டரின் உதவி தேவைப்படுவதாகவும் தெரிவித்தனர். ஆனாலும் கொரோனா தொற்று மற்றும் ஏற்கெனவே உடல்நலக் கோளாறு இருப்பதால் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது எனவும் அவர் உடல்நிலை குறித்து உறுதியாக எதுவும் கூறமுடியாது எனவும் தெரிவித்தார். மேலும் சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைத்தால் முழுமையாக குணமடைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
தொடர்ந்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். இந்நிலையில் அவருடைய உடல்நிலை மேலும் மோசமானதாக மருத்துவமனை நிர்வாகம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து விசாரிக்க மு.க.ஸ்டாலின் மருத்துவமனைகு நேரில் சென்றார்.
ஆனால் மருத்துவர்களின் சிகிச்சைக்கு ஜெ.அன்பழகனின் உடல் ஒத்துழைக்காததால் அவர் சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார். ஜெ. அன்பழகன் 1958ம் ஆண்டு ஜூன் மாதம் 10 தேதி பிறந்தார். அவரது உயிரும் அதே ஜூன் 10ம் தேதி 2020 ஆண்டு இந்த உலகை விட்டு பிரிந்துள்ளது.
சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகிக்கும் ஜெ.அன்பழகன், தி.நகர் தொகுதி எம்.எல்.ஏவாக 2001ம் ஆண்டு முதல் 2006 ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். மேலும் 2011ம் ஆண்டு மற்றும் 2016ம் ஆண்டுகளில் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றுள்ள ஜெ.அன்பழகன் சட்டப்பேரவையில் துணிச்சலாக கேள்விகளை கேட்க கூடியவர் என்றும் தைரியமான திமுக மாவட்ட செயலாளர் என்றும் அறியப்படுகிறார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த முதல் எம்.எல்.ஏ திமுகவின் ஜெ. அன்பழகன் என்பது குறிப்பிடத்தக்கது.