புதன், 21 செப்டம்பர், 2016

இனி பீக் அவர்ஸில் சுகமாக பயணிக்கலாம்: மெட்ரோ ரயில்-பேருந்து-கால்டாக்சி-பைக்- கட்டணம் ஓர் ஒப்பீடு

புதிதாக தொடங்கப்படும் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பீக் அவர்ஸ் எனப்படும் நெரிசலான நேரத்தில் பயணக் கட்டணம், பயண நேரம் ஆகியவற்றை மற்ற போக்குவரத்து வசதிகளான கால் டாக்சி, பஸ், பைக் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
விமான நிலையத்தில் இருந்து ஒருவர் ஆலந்தூர் வழியாக கோயம்பேடு செல்வதாக கருதலாம். கால் டாக்சியில் இதற்கு சுமார் ஒன்றரை மணி நேரமாகும். ‌இதற்குக் கட்டணம் சுமார் 300 ரூபாய் ஆகும். அரசுப் பேருந்திலும் ஒன்றரை மணி நேரம் பயணிக்க வேண்டிய நிலையில், இதற்குக் கட்டணம் 20 ரூபாய். இருசக்கர வாகனத்தில் சுமார் ஒரு மணி நேரம் பயணிப்பதுடன் பெட்ரோல் செலவு 20 ரூபாய் ஆக வாய்ப்புள்ளது. மெட்ரோ ரயிலில் பயண நேரம் அரை மணி நேரமே ஆவதுடன், கட்டணம் 40 முதல் 70 ரூபாய்க்குள் இருக்கும் எனத் தெரிகிறது.
இதேபோல, சின்னமலையில் இருந்து விமான நிலையத்துக்கு கால் டாக்சியில் முக்கால் மணி நேரம் பயணிக்க 230 ரூபாய் கட்டணமாகும். பேருந்தில் ஒரு மணி நேர பயணத்துக்கு 13 ரூபாய் கட்டணம் செலுத்த நேரிடும். இருசக்கர வாகனத்தில் சுமார் அரை மணி நேரம் பயணிக்க 15 ரூபாய் பெட்ரோல் செலவாகக்கூடும். மெட்ரோ ரயிலில் 20 நிமிடத்துக்குள் பயணிக்க 40 ரூபாய் செலவாகும் எனத் தெரிய வந்துள்ளது.