திங்கள், 4 செப்டம்பர், 2017

ஹைட்ரஜன் அணுகுண்டை சோதனை செய்தது வடகொரியா! September 04, 2017

ஹைட்ரஜன் அணுகுண்டை சோதனை செய்தது வடகொரியா!


ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக, வடகொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது. சமீபத்திய சோதனையின் போது ஏவப்பட்ட ஏவுகணை, ஜப்பான் வான் வழியாக சென்று, அங்குள்ள கடலில் விழுந்தது. இதற்கு தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இந்நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம், ஹைட்ரஜன் வெடிகுண்டு வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளதாக வடகொரிய நாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக ஹைட்ரஜன் குண்டு பரிசோதனைக்கு உத்தரவிடுவதற்கான ஆவணத்தில், அதிபர் கிம் ஜாங் யுன், கையொப்பமிடும் காட்சிகளும் வெளியாகி உள்ளன. 6வது முறையாக அணு ஆயுத சோதனையை வடகொரியா நிகழ்த்தியுள்ள நிலையில், சோதனை நடத்தப்பட்ட இடத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில், 6.3 ஆக பதிவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

வடகொரியாவின் இந்த சோதனையால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.இதனிடையே, வடகொரியாவின் ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனைக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.