
சிறைக்குச் செல்லப் போவது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் என அதிமுக அம்மா அணியின் துணை பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தம் மீது அன்னிய செலாவணி வழக்கை தவிர எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். சென்னை பெசன்ட் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு விரைவில் ஆட்சியை இழந்தவுடன் முதலமைச்சர் உட்பட முக்கிய அமைச்சர்கள் சிறைக்கு செல்வது உறுதி என கூறினார்.
முதல்வர் பழனிசாமியின் உறவினர்கள் வருமானவரி சோதனையில் சிக்கி உள்ளதால், தாமும் சிறைக்கு செல்ல நேரிடும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தம்மிடம் முன்பு கூறியதையும் டிடிவி தினகரன் நினைவு கூர்ந்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒப்பந்ததார்களிடம் கமிஷன் பெற்று ஆட்சி செய்வதால், அவர் நிச்சயம் சிறைக்கு செல்ல நேரிடும் எனவும் தினகரன் கூறினார் .
ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா குடும்பத்தினர் தான் காரணம் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளது பற்றி பேசிய டிடிவி தினகரன், “ ஆட்சி கலையப்போகிறது. அதனால், எங்கள் மீது கொலைப்பழி மட்டுமல்ல. தாவூத் இப்ராகிமுடன் சேர்ந்து குண்டுவெடிப்பு செய்ததுகூட நாங்கள் தான் என்றும் கூறுவார்கள்” என்றும் தெரிவித்தார்.