புதன், 1 நவம்பர், 2017

மாதவிலக்கிற்கு முன் (Pre Menstrual Syndrome)!

Image
சில நாட்களுக்கு முன்பு என் தோழியிடம் இருந்து ஒரு வாட்ஸப் மெசேஜ். என்னவென்று பார்த்தால், உன்னுடைய மெடிக்கல் இன்டர்ன்ஷிப்பில் காணநேரிடும் பல நிகழ்வுகளைப் பற்றி முகநூலில் எழுதி அதன் வழி பல நோய்கள் பற்றி நண்பர்கள் இடையே ஒரு புரிதலை உருவாக்கும் நீ ஏன் Premenstrual Syndrome (PMS) என்ற மாதவிலக்கிற்கு முன் தோன்றும் நோய்க்குறிகள் பற்றி எழுதக்கூடாது என்று கேட்டிருந்தாள். 

மேலும் தன் மனநிலை எவ்வாறு மாதவிலக்கிற்கு சில நாட்கள் முன்பிருந்து மாறத்தொடங்குகிறது என்றும், அதனால் வீட்டிலும் வேலையிடத்தில் ஏற்படும் உரசல்கள் பற்றியும் விவரித்து எழுதியிருந்தாள். கடைசியில் அவள் சொன்னது பல பெண்கள் உணரும் ஒரு உணர்வு. அது என்னவெனில் இவை யாவும் வழக்கத்திற்கு மாறான மனஉணர்வுகள் என்று தான் நன்கு உணர்திருப்பதாகவும்  தனக்கு ஏதோ ஒரு தீர்க்கமுடியாத மனநோய் இருப்பதாக பயம் எழுவதாகவும் முக்கியமாக இது குறித்து யாரிடமும் பேச அச்சமாக உள்ளதாகவும் சொன்னாள்.

வாஸ்தவம் தான், மனம் சார்ந்த பிரச்சனைகளை சமூகமும், நெருங்கிய சுற்றத்தாரும் ஏன் நாமே பார்க்கும் விதம் தான் நம்மை பயம் கொள்ளவைக்கிறது , எந்த அளவிற்கென்றால் அது குறித்து மனம் விட்டு பேசுவதையே ஒரு நோயாக காணும் அளவிற்கு. அவள் கூறிய அறிகுறிகளான, கடும் கோபம், அடங்காத ஆத்திரம், விம்மிப்புடைத்துக்கொண்டு வரும் காரணமற்ற கண்ணீர், அர்த்தமற்ற பயங்கள் யாவும் மாதவிலக்கிற்கு முன் தோன்றும் நோய்க்குறிகள் போன்றவைகள் PMS-ற்கான கிளாசிக் அறிகுறிகள். 
 
பின்னர் என் சீனியர் பரிந்துரைத்த Premenstrual Syndrome and Premenstrual Dysphoric Syndrome குறித்த ஒரு கட்டுரையை படித்த பொழுது, அதில்  குறிப்பிடப்பட்டிருந்த செய்திகள் அதிர்ச்சியையும், இந்தியச் சமூகம் பெண்களின் இந்தப் பிரச்சனையை எவ்வளவு அலட்சியமாக கையாளுகிறது என்ற ஆதங்கத்தையும் உண்டாக்கியது. மனநலம் சார்ந்த மருத்துவம் இன்னும் எத்தனை ஆழத்திற்கு சென்று பணியாற்ற வேண்டும் என்பதனையும் அந்தக் கட்டுரை படம்பிடித்துக் காட்டியது. 
 
இப்பொழுது அந்தக் கட்டுரையில் PMS பற்றியும் PMDD பற்றியும் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதனைப் பார்ப்போம். 
 
WHO என்ற உலக சுகாதார மையத்தின் நேர்காணல்களின் படி பெண்கள் பொதுவாகவே சற்று அதீத சோகமும், நம்பிக்கை இழந்தும், தாழ்வு மனப்பான்மையோடும், ஊக்கம் குறைந்தும் இருக்கிறார்கள் என்று கூறுகிறது. அதற்கு சமூக, பொருளாதார காரணிகளும், உடல் உபாதைகள் உண்டாக்கும் மனசஞ்சலங்களையும் நாம் காரணமாகக் கொள்ளலாம். 

இந்தியாவில் உள்ள பெண்களில் நான்கில் ஒருவர் 15 -29 வயதிற்கு உட்பட்டவர்கள். இந்த வயதினரே தங்கள் வாழ்நாளில் ஆகப் பெரும் எழுச்சியினை அனுபவிக்கிறார்கள், உடல், மனம், உணர்வு முக்கியமாக சமூகம் சார்ந்தும். சமூகம் இவர்களை எவ்வாறு பாவிக்கிறது என்பதும் சமூகத்தினை இவர்கள் எவ்வாறு பாவிக்கிறார்கள் என்பதும் ஆக முக்கியமானது. பெண்களின் முதல் மாதவிலக்கிலிருந்து அவர்களின் உடல் பெரும் மாறுதலுக்கு உள்ளாகுகிறது. அதில் முக்கியமானது, ஹார்மோன் அளவுகள் மாதவிடாய் சுழற்சியின் இரண்டு பகுதிகளில் எப்படி மாறுபடுகிறது என்பதாகும். 

காரணம், ஹார்மோன் அளவுகளில் உள்ள இந்த ஏற்ற இறக்கமே PMS மற்றும் PMDD-ற்கு வித்திடுவதாக அனுமானிக்கப்படுகின்றது. அப்படியாயின், இந்தியா எத்தனை பெரிய பிரச்சனையை தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பதையும், இதனை முறையாய் எதிர்கொள்ள நம்மிடம் அதற்கான சமூக கட்டமைப்போ, வேலையிட அமைப்போ, சுகாதார அமைப்போ இருக்கிறதா என்றும் நம்மை நாமே கேட்டுக்கொள்ளவேண்டும். மேலும் 80% பெண்கள் தங்களின் வாழ்நாளில் PMS/PMDD யை சுட்டிக்காட்டும் அறிகுறிகளை அனுபவித்திருக்கிறார்கள் என்பது நாம் கவனம் கொள்ளவேண்டிய செய்தி. இதில் PMDD என்பது தீவிரத்தன்மை அடைந்த PMS ஆகும். 
 
PMS இன் அறிகுறிகளாக கண்டறியப்பட்டவை: கவலை (தூங்குவதில் சிரமங்கள், எரிச்சல், மனநிலையினில் திடீர் மாற்றங்கள்), பசி மற்றும் தலைவலி, மனச்சோர்வு (சோகம், கவனம் மற்றும் நினைவுக் குறைவு), தாழ்ந்த சுய மதிப்பு, வன்முறை உணர்வுகள், உடல் உபாதைகள் (வலியுடன் கூடிய மாதவிலக்கு, மலங்கழிப்பதில் பிரச்சனை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், படபடப்புடன் உடல் திடீரென சூடாவது போல் உணர்தல்). இந்த அறிகுறிகளில் ஒன்றோ அல்லது பலவோ, மாதவிலக்கு ஆரம்பிப்பதற்கு ஏறத்தாழ ஒரு வாரத்திற்கு முன்பு ஆரம்பித்து விலக்கிற்குப் பின் மறைந்து விடும். இதில் கவனிக்க வேண்டியது, இந்த அறிகுறிகள் எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பதும் எத்தனை நாளாய் இருக்கிறது என்பதும். 
 
PMS என்பது  குணமாக்க முடியாத நிலை கிடையாது. இந்நிலைக்கான முதல் நிலை சிகிச்சை, பதிவு பெற்ற மனநிலை மருத்துவரின் மனநிலை மதிப்பீட்டிற்கு பின்னான மனச்சோர்வு மற்றும் கவலையினை மட்டுப்படுத்தக்கூடிய மருந்துகள். இதனைத் தவிர்த்து கோபத்தினை கட்டுப்படுத்த, மனஅமைதியினைப் பெற, மன அழுத்தத்தினை மட்டுப்படுத்த  உளவியல் சார்ந்த சிகிச்சைகளும் PMS-ற்கான சிகிச்சையில் அடக்கம். இச்சிகிச்சைகளோடு வாழ்க்கை முறைகளில் சில மாறுபாடுகளும் அறிவுறுத்தப்படும். உதாரணமாக உண்ணும் உணவின் தன்மை, புகைப்பழக்கத்தினை விட்டொழித்தல், முறையான தூக்கம், குடிப்பழக்கத்தினை மட்டுப்படுத்துதல், முக்கியமாக உடற்பயிற்சியினை மேற்கொளல். அதோடு வைட்டமின் பி 6, வைட்டமின் இ, கால்சியம் , மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்து மாத்திரைகளும் வழங்கப்படும். ஆக, PMS இனை முறையாக குணப்படுத்த தேர்ந்த மருத்துவர் மிகவும் அவசியம், காரணம் தைராய்டு பிரச்சனைகளும், இரத்தசோகையும், ஊட்டச்சத்து குறைபாடும், ஹார்மோன் ஏற்றத்தாழ்வும் PMS இற்கான அதே அறிகுறிகளை ஏற்படுத்தும். எனவே அச்சாத்தியங்களை முறையாய் கண்டு சரியான சிகிச்சையினை அளிக்க மருத்துவரின் உதவி மிக அவசியம். 
 
எனவே, இது போன்ற அறிகுறிகளினால் நீங்கள் தடுமாறிக்கொண்டிருந்தால் உடனே உங்கள் மருத்துவரை அணுகுங்கள், தகுந்த சிகிச்சையினைப் பெறுங்கள், முக்கியமாக உங்களுக்கு உரிமையான நிம்மதியான வாழ்வினைப் பெறுங்கள். தயக்கம் துறந்து துணிந்து செல்லுங்கள்.