
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் வருவதில் தவறில்லை என்று அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
பேரரறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு வைத்திலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு நவோதயா பள்ளிகள் வருவதில் தவறு இல்லை என்று கூறினார்.
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் மூலம் இந்தியைத் திணிக்க மத்திய அரசு முயன்று வருவதாக எதிர்க்கட்சிகள், தமிழ் ஆய்வாளர்கள் என பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் ஆளுங்கட்சி எம்.பி ஒருவர் நவோதயா பள்ளிகளுக்கு ஆதரவாக பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.