ஞாயிறு, 10 டிசம்பர், 2017

மாட்டுப்பால் மனித உடலுக்கு நல்லதல்ல.


துக்காராம் கோபால்ராவ்
பெரும்பாலான தமிழர்களுக்கு மாட்டுப்பால் என்பது ஒரு அத்தியாவசிய தேவை. காப்பி, தேனீர், இனிப்புகள், சமையல் எல்லாவற்றிலும் பால் எந்த வகையிலாவது சேர்க்கப்பட்டு சுவையூட்டப்படுகிறது. நான் எங்கே சென்றாலும் கும்பகோணம் டிகிரி காப்பி தேடித்தேடி குடித்துகொண்டிருந்தேன். யார் வீட்டுக்கு போனாலும் காப்பி கொடுக்கிறார்கள். ஆவின் பால்கோவா ரொம்ப பிடித்தமான இனிப்பு. இது எனக்கு மட்டுமல்ல. தமிழ்நாட்டில் எல்லாருமே மாட்டுப்பால் பிரியர்கள். தமிழ்நாட்டில் ஒரு வீட்டுக்கு சென்று காப்பி கொடுக்கவில்லை என்றால் அவமரியாதை என்றுதான் பார்ப்பார்கள்.
மாட்டுப்பால் மிகவும் புராதன காலத்திலிருந்தே இந்தியாவில் இருக்கும் ஒரு விசயம். ராமாயணத்தில் விசுவாமித்திரரின் பசுக்களை காக்க ராமனும் லட்சுமணனும் விசுவாமித்திரருடன் செல்கிறார்கள். எல்லா ரிஷிகளும் மாடுகளை வளர்க்கிறார்கள். தமிழில் மாடு என்றால் செல்வம் என்றுதான் பொருள். அடுத்தவரின் ஆடுமாடுகளை திருடுவது நாடுகளுக்கிடையேயான போருக்கு அச்சாணி. அதற்கு தமிழில் ஆநிரை கவர்தல் என்று பெயர்.
அப்படி விருந்தோம்பலிலிருந்து போர் புரிவது வரை தமிழ்நாட்டின் கலாச்சாரத்துடன் மிகவும் இணைந்த மாட்டுப்பாலை விசம் என்று சொல்லி குடிக்காதீர்கள் என்று நான் சொன்னால் கேட்கவா போகிறார்கள்?
இருந்தாலும் சொல்லி வைக்கிறேன்.
மாட்டுப்பால் உங்கள் உடல் நலத்துக்கு நல்லதல்ல. மாட்டுப்பாலை நிறுத்துவதும் மாட்டுப்பாலின் மூலம் உருவாகும் நெய், சீஸ், பாலாடைக்கட்டி, இனிப்பு வகைகள், க்ரீம் ஆகியவற்றை நிறுத்துவது உங்கள் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. சுமார் 1 வருடம் பால், பால் மூலம் வரும் உப உற்பத்தி பொருட்கள் எதையும் சாப்பிடாமல் இருந்துவிட்டுத்தான் இந்த கட்டுரையை எழுதுகிறேன். 10 வருடங்களாக இருந்த கொலஸ்ட்ரால் பிரச்னை கட்டுக்குள் வந்து ஏறத்தாழ சரியான அளவுக்கு வந்திருக்கிறது. a1c என்னும் டபபடீஸ் எண் வெகுவாக குறைந்திருக்கிறது. pre-diabetes அளவுக்கு சென்றிருந்த இந்த a1c எண் சாதாரண அளவுக்கு வந்திருக்கிறது. (கொலஸ்ட்ரால் மருந்தான ஸ்டாட்டின்களின் உப விளைவு டயபடிஸ்!)
ரத்த பரிசோதனை செய்யும்போது ஒருமுறை காப்பி குடித்துவிட்டு சென்று ரத்த பரிசோதனை செய்தேன். கொலஸ்ட்ரால் கன்னாபின்னாவென்று இருந்தது. டாக்டர் என்னிடம், “காப்பி குடித்துவிட்டு ரத்த பரிசோதனை செய்தீர்களா?” என்றார். ஆமாம் என்றேன். பால் குடித்துவிட்டு ரத்த பரிசோதனை செய்தால் அப்படித்தான் கொலஸ்ட்ரால் கன்னாபின்னாவென்று காட்டும். ஆகவே அடுத்த முறை எதுவும் குடிக்காமல் சாப்பிடாமல் ரத்த பரிசோதனை செய்யுங்கள் என்றார். அப்படி ரத்த பரிசோதனை செய்தபோது, ஓரளவுக்கு குறைந்திருந்தது என்றாலும் கொலஸ்ட்ரால் இருந்தது. இது நடந்து 10 வருடங்களுக்கு மேலாயிற்று.
அவ்வப்போது என் டாக்டரிடம் கேட்பேன். “பால் நிறுத்தினால் கொலஸ்ட்ரால் குறையுமா?” என்ற கேள்விக்கு, “என்ன குடம் குடமாவா குடிக்கிறீங்க? காலையில ஒரு அரைகப் பால் அரைகப் காப்பின்னு சேர்த்து குடிப்பீங்க.. அதுனால என்ன ஆயிடப்போவுது” என்பார்.
Community-Parlor
இந்த வருடம் ஆரம்பத்தில், சரி அவர் சொல்லலைன்னாலும் பாலை நிறுத்துவோம் என்று நிறுத்தினேன். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஒருமுறை பாலை வாங்கி காச்சி குடிக்கும்போது லேசாக கவுச்சி வாடை வந்தது. மாட்டின் மடியில் மெஷினை மாட்டி கறக்கும்போது நேரம் அதிமானால், பாலோடு ரத்தத்தையும் கறந்துவிடும். அதனால், பாலில் கவுச்சி வாடை அடிக்கும். அந்த வாடை எனக்கு அசூசையாக இருந்தது. ஆகையால் பாலை நிறுத்துவோம் என்று நிறுத்திவிட்டு பாதாம் பாலை (almond milk) பாலுக்கு பதிலாக உபயோகப்படுத்த ஆரம்பித்தேன்.
மாட்டுப்பாலை விட்டுவிட்டு, பாதாம் பாலை உபயோகப்படுத்த ஆரம்பித்ததிலிருந்து அவ்வப்போது வரும் வயிற்று பொருமல் போன்ற சிறு சிறு உபாதைகள் இல்லை. அதன் பின்னால் இதுவரை 4 ரத்த பரிசோதனைகளை எடுத்துவிட்டேன். (மூன்று மாதங்களுக்கு ஒரு முறை) ஒவ்வொரு முறையும் கொஞ்சம் கொஞ்சமாக கொலஸ்ட்ரால் குறைவதும், a1c குறைவதையும் பார்த்துகொண்டே வருகிறேன். மாட்டுப்பாலை விட்டதைவிட பாதாம் பாலை சாப்பிட ஆரம்பித்ததால் ஒருவேளை இந்த சீரமைப்பு நடந்திருக்கலாம் என்று மனைவி சொன்னார். இருக்கலாம்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் school of public heath பிரிவு பாலில் இருக்கும் கொழுப்புக்கும் இதய நோய்க்கும் இடையேயான உறவை ஆராய்ந்திருக்கிறது. மருத்துவர்களிடம் வந்த 43000 ஆண்கள், செவிலியர்களிடம் வந்த 87000 பெண்கள், செவிலியர் (நர்ஸ்கள்) சுகாதார ஆய்வில் 90000 பெண்களை ஆராய்ந்தும், இதய நோய்க்கும் மாட்டுப்பால், மாட்டுப்பாலில் உள்ள கொழுப்பு ஆகியவைகளுக்கு இடையேயான உறவை ஆராய்ந்து அந்த ஆராய்ச்சி முடிவுகளை ஆராய்ச்சி கட்டுரையாக வெளியிட்டிருக்கிறது.
(இணைப்பு 6, இணைப்பு 7 )
மாட்டுப்பாலில் இருக்கும் கொழுப்புக்கு பதிலாக அதே அளவு கொழுப்பை தாவரங்களிடமிருந்து பெறுவது இதய நோய்களை சுமார் 10 சதவீதம் குறைக்கிறது. பாலி அன்சேச்சுரேட்டட் கொழுப்பு என்ற கொழுப்பை தாவரங்களிடமிருந்து பெறுவது இதய நோயை 24 சதவீதம் குறைக்கிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள்.
வேறுவிதமான கொழுப்பு (மாட்டுக்கறி, ஆட்டுக்கறி, போன்றமிருக கொழுப்புகள்) உண்பது இதய நோயை 6 சதவீதம் அதிகரிக்கிறது.
scholar.google.com இல் தேடினால், மாட்டுப்பாலினால் மனித உடலுக்கு தீங்குதான் என்று ஆராய்ச்சி கட்டுரைகள் இருக்கின்றன.
இதயம், கொலஸ்ட்ரால் சம்பந்தப்பட்ட நோய்கள்
முதலாவது மாட்டுப்பாலில் மிகுதியாக இருக்கும் கேஸீன் Casein என்னும் புரோட்டீன் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை அதிகரிக்கிறது என்று சொல்லுகிற ஆராய்ச்சி கட்டுரை. இந்த கேஸீனில் இருவகை உண்டு. ஒன்று a1. மற்றொன்று a2. ஏ2 வை விட எ1 மிக அதிகமாக கொழுப்பு படிய வைத்தாலும் இரண்டும் கொழுப்பு படிய வைக்கின்றன. இதுவே ரத்த நாளங்களில் கொழுப்பு அடைத்துகொண்டு இதய நோய் வர முக்கிய காரணமாக இருக்கிறது. எ1 கேஸீன் புரதம், எ2 கேஸீன் புரதத்தை விட அதிகமாக ldl (கெட்ட கொலஸ்ட்ரால்) அதிகரிக்க வைக்கிறது. (இணைப்பு 1)
டி-காலக்டோஸ் என்ற ஒரு சர்க்கரை பாலில் உள்ளது. இந்த சர்க்கரை இதய நோய்களுக்கு காரணமாக இருக்கிறது என்று மற்றொரு ஆய்வு சொல்லுகிறது (இணைப்பு 5)
எலும்பு முறிவு
அதிகமாக பால் சாப்பிடுவது எலும்பு முறிவுகளுக்கு காரணமாக இருக்கிறது. ஸ்வீடனில் நடந்த ஆய்வு. (இணைப்பு 2). பொதுவாக பாலில் உள்ள கால்சியம் நம் எலும்புகளுக்கு சத்து என்று கருதுகிறோம். இது உண்மையல்ல. பாலில் உள்ள கால்சியம் எலும்பு முறிவை தடுப்பதில்லை. பால் சாப்பிடுவது எலும்பு முறிவுகளை 50 சதவீதம் அதிகரிக்கிறது என்று செவிலியர் சுகாதார ஆய்வு தெரிவிக்கிறது.
பாலில் உள்ள கால்சியமும் பாலும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்றும் ஆய்வு தெரிவிக்கிறது. (இணைப்பு 9)
பருக்கள்
முகத்தில் பருக்கள் வருவதற்கு பால் சாப்பிடுவது காரணமாக இருக்கிறது. (இணைப்பு 3)
கர்ப்பப்பை புற்றுநோய்
கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்களை பால் அதிகரிக்கிறது (இணைப்பு 4)
பாலை சாப்பிடுவதால் வரும் ஏராளமான உடல் பிரச்னைகளை ஹப்பிங்க்டன் போஸ்ட் விலாவாரியாக விளக்குகிறது. (இணைப்பு 10)
மாட்டுப்பாலில் நல்லதே இல்லை என்று சொல்லிவிட முடியாது. மாட்டுப்பாலில் கால்சியம், பொட்டாசியம், புரோட்டீன், பாஸ்பரஸ், விட்டமின் d, விட்டமின் b12, ரிபோபிளேவின், நையாசின் ஆகிய சத்துக்கள் இருக்கின்றன. ஆனால் விட்டமின் b12, விட்டமின் d ஆகியவற்றை தவிர மற்ற சத்துக்களை தாவரங்களின் மூலமாகவே பெற்றுகொள்ளலாம்.
தமிழ்நாட்டில் சுமார் 6 கோடி மக்களுக்கு மாட்டுப்பால் கொடுக்க சுமார் 1 கோடி மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இதற்காக புல் மட்டுமே கொடுக்கப்படுவதில்லை. இந்த மாடுகளுக்கு சோளம், மக்காச்சோளம், பாஜ்ரா போன்ற தானியங்கள் கொடுக்கப்படுகின்றன. கூடவே மாடுகள் அதிகமாக பால் கறப்பதற்காக அசைவ உணவும் கொடுக்கப்படுகிறது. இந்த மாடுகளுக்கு நோய் வராமலிருக்க ஏராளமான தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இந்த மாடுகளுக்கு கொடுக்கப்படும் அசைவ உணவும் அதன் மூலமான மிருகங்கள் மூலம் இன்னும் ஏராளமான தடுப்பு மருந்துகளை கொண்டிருக்கிறது. இவை அனைத்து தேவையற்ற தடுப்பு மருந்துகள் (antibiotics) பாலின் மூலமாக நாம் சாப்பிட்டுகொண்டிருக்கிறோம்.
மாடுகள் நிறைய பால் கறக்கவேண்டும் என்று ஏராளமான ஹார்மோன்கள் மாடுகளுக்கு கொடுக்கப்படுகின்றன. பெண்மைத்தன்மையை அதிகரிக்க கொடுக்கப்படும் இந்த ஹார்மோன்கள் மாட்டின் பாலின் வழியே நமது காப்பி டீயிலும் வருகிறது. இந்த ஹார்மோன்களையும் சேர்த்தே நாம் அருந்துகிறோம்.
நாம் வெகுகாலமாக பால் போட்ட காப்பி டீயை குடித்துவிட்டு திடீரென்று பாலை விடச்சொன்னால் ஏற்றுகொள்வோமா என்ன?
ஆனால் இந்த பிரச்னைக்கு சீனர்கள் ஒரு நல்ல தீர்வை கண்டறிந்தார்கள். பெரும்பாலான சீனர்கள் பால் அழற்சி கொண்டவர்கள். ஐந்து வயதுக்கு பிறகு சீனர்களது உடல் பாலை செரிக்காது. lactose intolerent என்னும் பால் அழற்சி தானாக இவர்களுக்கு வந்துவிடுகிறது (இந்தியர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் இந்த பால் அழற்சி பெரும்பாலும் வருவதில்லை. என்றாலும், இந்தியர்கள், ஐரோப்பியர்களில் சுமார் ஐந்தில் ஒரு பகுதியினர் பாலில் உள்ள லாக்டோஸ் என்னும் புரதத்தை உடைக்க மனித உடலில் சுரக்கும் லாக்டேஸ் என்னும் என்சைம் இல்லாதவர்கள் (அல்லது மிகக்குறைவாக உள்ளவர்கள்) லாக்டேஸ் உடலில் சுரக்கவில்லை என்றால், பாலை செரிமானம் செய்யமுடியாது. இது வயதாக வயதாக அதிகரிக்கிறது. இதனால் வயதானவர்கள் பாலை சாப்பிடுவதால், வயிற்றுபோக்கு, அல்ஸர் ஆகியவை வரவும் காரணமாகிறது.
மிகப்பழங்காலம் தொட்டே சீனர்கள் சோயா மொச்சையின் பாலை (soy milk) உபயோகப்படுத்தி வந்திருக்கிறார்கள். சோயாவை வைத்து, கஞ்சி, அதன் பாலை திரித்து டோஃபூ (tofu) என்கிற கட்டி (பன்னீர் போல) ஆகியவற்றை உபயோகப்படுத்தி வந்திருக்கிறார்கள். இந்த சோயா பாலை வைத்து ஐஸ்கிரீம், தயிர் போன்றவற்றையும் செய்து பயன்படுத்தி வருகிறார்கள்.
மாட்டுப்பாலை தவிர்க்க விரும்பியவர்கள் இந்த சோயா பாலை உபயோகப்படுத்துவருகிறார்கள்.
ஐரோப்பாவில் பாதமை இதேபோல அரைத்து பால் போல உபயோகப்படுத்துவது 14 ஆம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்துவிட்டது. Almond milk என்று இணையத்தில் தேடினால் ஏராளமான பால் பாக்கெட்டுகள் விற்பனைக்கு இருப்பதை பார்க்கலாம்.
சோயா பால் சுவை பலருக்கும் பிடிக்காத காரணத்தால் தற்போது பாதாம் பால் விற்பனை அதிகரித்து வருகிறது. தற்போது பாதாம் பாலின் விற்பனை சோயா பாலின் விற்பனையை விட அதிகரித்துவிட்டிருக்கிறது.
ICSS-XXTSDC.500w
இது போல மாட்டுப்பாலை தவிர்க்க விரும்புபவர்களுக்கு ஏராளமான இதர வாய்ப்புகள் இருக்கின்றன.
சோயா பால், பாதாம் பால், தேங்காய் பால், அரிசிப்பால், ஓட்ஸ் பால், போன்ற தாவர அடிப்படை கொண்ட பால்கள் அமெரிக்கா ஐரோப்பா போன்ற இடங்களில் மிக அதிகமாக விற்பனை ஆகின்றன.
soymilk
organic-soymilk-plain-500x500
almondmilk
soymilk
துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் பாதாம் பால், சோயா பால் போன்றவை கடைகளில் எளிதாக கிடைப்பதில்லை. ஆனால் பாதாம் பால், சோயா பால் போன்றவற்றை வீட்டிலேயே தயாரிப்பது மிகவும் எளியது. பெரும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் இந்த தாவர வகை பால்கள், மாட்டுப்பால் போலவே ருசியுடனும் மெல்லிய இனிப்புடனும், திரியாமலும் இருப்பதற்காக பல வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
வீட்டில் இதே பால்களை தயாரித்தால், அந்த வகை வேதிப்பொருட்களை தவிர்த்து சுத்தமான பாலை நாமே தயாரித்துகொள்ளலாம். நான் சோம்பேறி என்பதால் பாதாம் பாலை கடையிலேயே வாங்கிவிடுகிறேன். ஏறத்தாழ மாட்டுப்பாலின் விலைதான் இதுவும்.

பால்கள் ஒப்பீடு.
Nutritional content of cows’, soy and almond milk
Cows’ milk
(whole, vitamin D added)
Soy milk
(unsweetened;
calcium, vitamins A and D added)
Almond milk
(unsweetened)
Calories Cup, 243 g)1498039
Protein (g)7.696.951.55
Fat (g)7.933.912.88
Saturated fat (g)4.550.50
Carbohydrate (g)11.714.231.52
Fibre (g)01.20
Sugars (g)12.3210
Calcium (mg)276301516
Potassium (mg)322292176
Sodium (mg)10590186
Vitamin B12 (µg)1.102.700
Vitamin A (IU)395503372
Vitamin D (IU)124119110
Cholesterol (mg)2400

சோயா பால் செய்யும் முறை.
(நன்றி )
தேவையான பொருட்கள்
1/2 கோப்பை வெள்ளை சோயா மொச்சைகள்
2-3 கோப்பை தண்ணீர், ஊறவைக்க
4 கோப்பை தண்ணீர் அரைக்க
சர்க்கரை தேவையான அளவு
செய்முறை
சோயா மொச்சைகளை 2-3 கோப்பை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்கவும்.
மொச்சைகளை எடுத்துகொண்டு தண்ணீரை கொட்டிவிடவும்
தோலை நீக்கிவிடவும்
இந்த சோயா மொச்சைகளையும் 4 கோப்பை தண்ணீரையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்
மஸ்லின் துணியில் இந்த சோயா பாலை ஊற்றி வடிகட்டி சுத்தமான பாலாக எடுத்துகொள்ளவும். சக்கையை வேண்டாமென்று போட்டுவிடலாம்.
இந்த பாலை அப்படியேயும் உபயோகப்படுத்தலாம். கொதிக்கவைத்தும் உபயோகப்படுத்தலாம்.
சோயா தயிர் செய்வதென்றால், இந்த பாலை அடிபிடிக்காத பாத்திரம் ஒன்றில் கொட்டி 82 டிகிர் செல்சியஸ் வெப்பத்தில் 20 நிமிடம் தொடர்ந்து வைத்து, அடிக்கடி கிளறிவிட்டு பிறகு எடுத்து ஆற வைத்து குளிர வைத்து சேமித்து வைத்துகொள்ளலாம்.
பாதாம் பால் செய்முறை
1410184606153
தேவையான பொருட்கள்
1 கோப்பை உப்பு போடாத, பச்சை பாதாம்கள்
1-3 கோப்பை தண்ணீர் ஊறவைக்க
4 கோப்பை தண்ணீர் அரைக்க
செய்முறை
1. இந்த பாதாம்களை 12 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்
2. இந்த பாதாம்களை எடுத்து தண்ணீரை கொட்டிவிடவும்
3 இந்த பாதாம்களை மிக்ஸியில் போட்டு நன்றாக கூழாகும் வரை அரைத்துகொள்ளவும்
4 இந்த கரைசலை, மஸ்லின் துணியில் கொட்டி பிழிந்து சுத்தமான பாலாக எடுத்துகொள்ளவும். சக்கையான பாதாம் தூள்களை சமையலில் உபயோகப்படுத்திகொள்ளலாம்.
5. இந்த பாலை உடனே ரெஃப்ரிஜிரேட்டரில் வைத்துகொள்ளுங்கள். 3 அல்லது 4 நாட்களுக்குள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
4 கோப்பைகள் என்பது ஒரு லிட்டர் அளவுக்கு பால்.
ஒரு கோப்பை பாதாம் என்பது சுமார் 140 கிராம்.
இன்று ஒரு லிட்டர் பால் 40 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால் பாதாம் பால் இந்த முறையில் செய்யவேண்டுமென்றால் ஒரு லிட்டர் பாதாம் பால் சுமார் 150 ரூபாயாகும். ஆகவே இது மாட்டுப்பாலை விட முன்று மடங்கு விலை அதிகம். இவ்வாறு பாதாம் பால் வாங்குபவர்கள் அதிகமானால், இந்த பாலின் விலை மாட்டுப்பாலின் விலையை விட குறைவானதாக ஆகும்.
ஆனால் சோயாவின் விலை மிகவும் குறைவு. இந்த முறையில் சோயா பால் செய்தால், ஒரு லிட்டர் சோயா பாலின் விலை 5 ரூபாய்தான்.

இந்த பால்களை லேசாக சூடாக்கி அத்தோடு சூடான டிகாக்‌ஷனை சேர்த்தால், அருமையான காப்பி ரெடி.
இந்த பால்களை சூடாக்கி நேராக இன்ஸ்டண்ட் காபி சேர்த்தால் மிகவும் நன்றாக கும்பகோணம் காப்பி மாதிரியே கெட்டியாக மணத்தோடு வரும்.
almondcofee
முயற்சி செய்து பார்த்து இதனால் பயன் இருந்தால், உங்கள் நண்பர்களிடமும் சொல்லுங்கள்.