ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

​ரஜினி அரசியலில் காவிச்சாயம் உள்ளது - கமல் February 11, 2018

Image

காவியை ரஜினி தேர்ந்தெடுத்தால் அவருடன் தாம் கைகோர்த்து அரசியல் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு இல்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் உரையாற்றினார். அப்போது தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்து நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். தமிழில் வணக்கம் எனக் கூறி பேச்சை தொடங்கிய கமல், தமிழகத்தில் கிராமங்களில் இருந்து மாற்றத்தை கொண்டுவர விரும்புவதாக தெரிவித்தார்.  

இந்த மாற்றத்திற்கு அனைவரின் பங்களிப்பை தான் எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து அதை முன்னோடி கிராமமாக  திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். திட்டங்களை அமல்படுத்துவதில் உள்ள குறைகளே தமிழக அரசின் நிதிச்சுமைக்கு காரணம் என விமர்சித்த கமல், ஓட்டுக்கு பணம் வாங்கினால் நமது பாக்கெட்டில் இருந்து அரசியல்வாதிகள் பணத்தை எடுக்கும் போது அதனை நாம் கேள்வி கேட்கமுடியாது என்று கூறினார். 

தேர்தல் அரசியலுக்கு வராமலேயே மக்களுக்கு சேவையாற்றிய பெரியாரும், காந்தியும் தமது ஹீரோக்கள் என்று கமல் நெகிழ்ச்சியுடன் கூறினார். அரசியலில் வித்தியாசமான பாதையைத் தேர்ந்தெடுத்து வித்தியாசமான அரசியல்வாதி என்கிற பெயரை எடுப்பதே தமது விருப்பம் என்றும் கமல் கூறினார். 
ரஜினியும் தானும் சிறந்த நண்பர்கள் என்று கூறிய கமல், இருவரது நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே என்று ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் ஆற்றிய உரையில் கமல் குறிப்பிட்டார். ரசிகர்களுடனான சந்திப்பின்போது ஆன்மீக அரசியல் பயணம் குறித்து ரஜினிபேசியதை சுட்டிக்காட்டிப் பேசிய கமல், ரஜினி தேர்ந்தெடுக்கும் நிறம் காவியாக இருக்காது என நம்புவதாகக் குறிப்பிட்டார். 

ரஜினியின் அரசியலில் காவிச்சாயல் உள்ளது. அது மாறவில்லை என்றால் அவரோடு கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்றும் கமல் தெரிவித்தார். 

அரசியல் பயணத்தை கமல் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில் கமலின் இந்த கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Posts: