
சுதந்திரமான பாலஸ்தீன நாடு விரைவில் உதயமாகும் என இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது. சர்வதேச மத்தியஸ்த குழு மூலம் இஸ்ரேலுடனான பிரச்னையை தீர்க்க இந்தியா உதவ வேண்டும் என பாலஸ்தீனம் கேட்டுக் கொண்டுள்ளது. மோடியின் பாலஸ்தீன பயணம் சர்வதேச அளவில் முக்கியவத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நாள் அரசுப்பயணத்தின் முதற்கட்டமாக, பாலஸ்தீனத்தின் ரமல்லா நகருக்கு, பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அம்மானில் இருந்து ஜோர்டான் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பயணித்த மோடிக்கு, இஸ்ரேல் விமானப்படை பாதுகாப்புக்கு வந்தது. ரமல்லாவில், மோடியை, பாலஸ்தீன பிரதமர் ரமி அம்துல்லா வரவேற்றார். முன்னாள் அதிபர் யாசர் அராபத்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின், பாலஸ்தீன அதிபர் மமூத் அப்பாஸை, மோடி சந்தித்துப்பேசினார். இதனை தொடர்ந்து, இருநாடுகள் இடையே, 50 மில்லியன் டாலர் மதிப்பீட்டிலான 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பாலஸ்தீனத்தின் Beit Sahur-ல் 30 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை, இந்தியா அமைத்து தருவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. கல்வித்துறை மேம்பாட்டிற்கான ஒப்பந்தம், பெண்கள் மேம்பாட்டிற்கான மையம் அமைப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் எட்டப்பட்டன. பின்னர் பாலஸ்தீன அதிபர் மமூத் அப்பாசும், பிரதமர் மோடியும் கூட்டாக பேட்டியளித்தனர். சோதனையான தருணத்திலும் இந்தியாவும் பாலஸ்தீனமும் ஒன்றிணைந்து செயல்பட்டதாகவும், பாலஸ்தீனத்துடனான நட்புறவு இந்தியாவுக்கு பெருமையான ஒன்றாகும் என்றார். மேலும், இந்திய வெளியுறவுக் கொள்கைகளில் பாலஸ்தீனத்திற்கு எப்போதும் முன்னுரிமை உண்டு என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். சுதந்திரமான பாலஸ்தீன நாடு விரைவில் உதயமாகும் என இந்தியா நம்புவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இஸ்ரேலுடனான பிரச்னையை சுமூகமாக தீர்க்க, சர்வதேச நாடுகள் அடங்கிய மத்தியஸ்ய குழு அவசியம் என்றும், இதற்கு இந்தியாவின் உதவி தேவை என்றும் பாலஸ்தீன அதிபர் மமூத் அப்பாஸ் கேட்டுக் கொண்டார். 1967ம் ஆண்டு நெறிமுறைகளின் படி, இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்த, பாலஸ்தீனம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
பாலஸ்தீனத்தின் உயரிய விருதான Grand Collar விருது, பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. பாலஸ்தீனத்திற்கு இந்திய பிரதமர் செல்வது இதுவே முதல் முறையாகும். எனவே, மோடியின் பாலஸ்தீன பயணம் சர்வதேச அளவில் முக்கியவத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.