
அரசிடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் உதவிகேட்டும் கிடைக்காததால் பெண் ஒருவர் பிச்சை எடுத்து கழிப்பறை கட்டிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
பீகார் மாநிலம் சுபௌல் மாவட்டத்தில் உள்ள பத்ரா என்ற கிராமத்தில் இருப்பவர் அமினா காட்டூன். 40 வயதான அமினாவின் கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில், தன் வீட்டுக்கு அருகில் கழிப்பறை ஒன்றைக் கட்டிக்கொள்வதற்காக அமினா விண்ணப்பித்திருக்கிறார். ஆனால், அதிகாரிகள் அவருக்கு உதவவில்லை. இதனால், தன் அருகாமை கிராமங்களுக்குச் சென்று பிச்சையெடுத்து கழிப்பறைக் கட்டிக்கொண்டுள்ளார்.
அமினாவின் இந்த முயற்சியை அறிந்து அவருக்கு வீடுகட்டிக்கொடுத்த கட்டிடப்பணியாளர்கள் தங்களுக்கு கூலி எதுவும் வேண்டாம் என தெரிவித்துவிட்டனர்.
பீகார் மாநிலத்தில் திறந்தவெளி கழிப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் மிகப்பெரிய அளவில் அங்கு விளம்பரப்படுத்தப்படுகிறது. பல நூறு கோடியில் தூய்மை இந்தியா என்கிற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படும் மாநிலத்தில் பெண் ஒருவர் பிச்சையெடுத்து கழிப்பறை கொண்டிருப்பது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.