திங்கள், 12 பிப்ரவரி, 2018

“தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தை தத்தெடுத்து, அதை உலகின் மிகச் சிறந்த கிராமமாக வளர்த்தெடுப்பேன்” February 12, 2018

Image

தமிழகத்தின் கிராமங்களில் இருந்து அரசியல் மாற்றத்தை உருவாக்க விரும்புவதாக, நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். 

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய கமல்ஹாசன், தன்னிறைவு பெற்ற, சுயச் சார்புடைய கிராமம் உருவானால், இந்தியா தானாக முன்னேறும் என்று மகாத்மா காந்தி கூறியுள்ளதாக குறிப்பிட்டார்.

காந்தியின் சிந்தனைப்படி, தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தை தத்தெடுத்து, அதை உலகின் மிகச் சிறந்த கிராமமாக வளர்த்தெடுப்பேன் என்று தெரிவித்தார். முதலில் ஒரே ஒரு கிராமத்தில் தொடங்கி, பின்னர் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு கிராமத்தை  தத்தெடுப்பேன் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

வரும் 21-ம் தேதி, அரசியல் பயணத்தை தொடங்கும் நாளில், கிராம தத்தெடுப்பு பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் அவர் கூறினார். 

மக்களின் முன்னேற்றத்துக்காக, உலகமெங்கும் வாழும் தமிழச் சமூகம், தனக்கு ஆலோசனைகளையும் பங்களிப்பையும் வழங்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார்.

அரசின் நடவடிக்கைகளை விமர்சிப்பதில் தனக்கு சலிப்பு உண்டாகிவிட்டதாகவும், எனினும், நல்லாட்சியை வலியுறுத்துவது தனது உரிமை, இதை தவறாக கருதக் கூடாது என்றும், கமல்ஹாசன் தனது உரையில் குறிப்பிட்டார்.

தமிழ் மன்னர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், மொழிப்பற்று, நிர்வாகத் திறன், சர்வதேச வர்த்தகம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியதாக குறிப்பிட்ட கமல், கற்றுக்கொள்வதற்கு அவர்கள் சிறந்த யோசனைகளை விட்டுச் சென்றிருக்கிறார்கள், என்றும் கூறினார்.

தமிழகத்தை சீர்படுத்தும் தனது முயற்சியில், அனைவரும் பங்களிப்பை வழங்க வேண்டும், என்று கேட்டுக்கொண்ட கமல்ஹாசன், தனது இலக்கு நிறைவேறும், என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

Related Posts: