வியாழன், 15 பிப்ரவரி, 2018

வாழ்வாதாரத்திற்காக கூலி வேலைக்கு செல்லும் இந்திய அணியின் கேப்டன்! February 14, 2018

Image

இந்திய விளையாட்டு அணிக்கு கேப்டனாக இருக்கும் ஒருவர் தனது வாழ்வாதாரத்திற்காக விவசாயம் செய்து வரகிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் தமிழகத்தை சேர்ந்த ஒருவரின் சோகத்தை பதிவு செய்கிறது இந்த செய்தி தொகுப்பு.

இந்திய அணி கேப்டன் என்ற உடன் விராட் கோலி என சொல்லுமளவிற்கு தான் உள்ளது. இந்தியாவில் விளையாட்டுகளின் நிலை. கிரிக்கெட் என்ற ஒற்றை விளையாட்டிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டுகளுக்கு கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து கொண்டே வருகிறது. அந்த குற்றச்சாட்டுகளை மெய்பிக்கிறது இந்த சம்பவம்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் தேவசித்தம்.  சிறுவயதிலிருந்து படிப்பு மட்டுமல்லாமல் விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக விளங்கினார் தேவசித்தம்..

கிரிக்கெட், கால்பந்து என இளைஞர்கள் படையெடுத்து கொண்டிருக்க 'லங்கடி' எனப்படும் நொண்டி அடித்து தொடுதல் விளையாட்டில் இவர் ஆர்வம் காட்டினார். 2012ம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேசிய அளவிலான லங்கடி விளையாட்டில் இவரது தலைமையிலான தமிழக அணி முதல் இடம் பிடித்தது. 

பின்னர் 2013ம் ஆண்டு, தமிழ்நாட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான லங்கடி, விளையாட்டில் இவரது தலைமையிலான தமிழக அணி மீண்டும் முதல் இடத்தை பிடித்தது. இதில் சிறந்த விளையாட்டு வீரர் 
விருதினையும் பெற்று இந்திய அணியின் கேப்டன் ஆக தேர்வு செய்யப்பட்டார். 

2014ஆம் ஆண்டு ஆசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் இவர் தலைமையிலான இந்திய அணி தங்கப் பதக்கம் பெற்று அசத்தியது. 

சாதனைகளின் உச்சமாக, 2017ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற உலககோப்பைக்கான லங்கடி போட்டியில் இவரது தலைமையிலான இந்திய அணி தங்கம் வென்றது. 

இத்தனை சாதனைகளுக்கு சொந்தகாரரான தேவசித்தம், தனது குடும்ப வாழ்வாதாரத்திற்காக தற்போது விவசாயம் செய்துகொண்டும் கூலி வேலை பார்த்தும் வருகிறார். 

ஒருபக்கம் குடும்பத்திற்காக வேலை செய்தாலும் மறுபக்கம் தனது விளையாட்டின் மீது கொண்ட ஆர்வத்தால் அவர் கிராமத்தில் இருக்கும் பள்ளி சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும்  லங்கடி விளையாட்டை தினமும் பயிற்சி அளித்து வருகிறார் தேவசித்தம்.

இவரை இரு ஆண்டுகளுக்கு முன் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அழைத்து பாராட்டியதோடு முதலமைச்சரின் நேரடி வேலைவாய்ப்பில் வழங்கப்படும் முதல் தர  கவுரவ அந்தஸ்து பதவியும், உயரிய ஊக்க தொகையும் வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்து உள்ளார். ஆனால் இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றபடவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் அவரது குடும்பத்தினர்.

தற்பொழுது நமது இந்திய லங்கடி அணியின் கேப்டனாக இருந்து வருகிறார் தேவசித்தம். இவர்போன்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தேவசித்தம் போன்ற வீரர்களின் கோரிக்கையாக உள்ளது.

இவரது கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.