இந்தியாவில் இருக்கும் வேலைவாய்ப்புகளுக்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து உலக வங்கி ஆய்வறிக்கை அளித்துள்ளது. Systematic Country Diagnostic என்கிற பெயரில் இந்தியாவில் உள்ள அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து அவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில், இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்பு உருவாக்கத்தைக் குறித்து உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பொருளாதார சமத்துவமின்மைக்கான இடைவெளி அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் உலகவங்கி, இந்தியா தற்போது அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு அதிக வருவாய் வரக்கூடிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வேண்டிய தேவையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. சுயதொழில்களை ஊக்குவிப்பதைவிட புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதே தற்போது மிக முக்கியமான தேவை என்றும் உலக வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுத்தர வர்க்க மக்களின் வருவாய் பெருக்கத்தில் 2047ம் ஆண்டுக்குள் இந்தியா உலக அளவில் முன்னேற வேண்டும் என்றால் அதிக வருவாய்/சம்பளம் உடைய வேலைகளை உருவாக்க வேண்டியது கட்டாயம் என உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது வருவாய் ஈட்டும் மனிதர்களாக இருப்பவர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் மட்டுமே மாதச்சம்பளம் வாங்கும் ஊழியர்களாக இருக்கின்றனர். இவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாகவே குறைந்த வருவாய் உடைய நடுத்தர வர்க்க மக்கள்தொகை இந்தியாவில் அதிகமாக உள்ளதாக உலகவங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது தனிநபர் வருவாயின் அளவானது அமெரிக்காவில் உள்ள தனிநபர் வருவாயில் 12% மாக மட்டுமே உள்ளது. இந்தியாவில் 2005 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் ஆண்டுக்கு 30 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால், இதேகாலத்தில் சுமார் 1.3 கோடி பேர் கூடுதலாக வேலைக்கு செல்லும் அடைந்துள்ளனர். ஆனால், 2012க்கு பிறகான காலகட்டத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தைக் குறித்து நம்பகத்தன்மையான அறிக்கைகள் ஏதும் கிடைக்கவில்லை. மாதச்சம்பளம் வாங்கும் அமைப்புசார் பணியாளர்களின் எண்ணிக்கையில் இந்தியா வங்கதேசம், இலங்கையைவிட பின் தங்கியுள்ளது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
நன்றாக இயங்கக்கூடிய நில வியாபார சந்தையில் சொத்துக்களை பதிவுசெய்வதில் உரிய உரிமைகளும், நிலத்தில் முதலீடு செய்வதற்கான நன்கு யூகிக்கக்கூடிய முன்னேற்ற செயல்பாடுகள், நெகிழ்வான தொழிலாளர் சந்தை போன்றவை வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு பெருகுவதற்கும் முக்கியம் என உலகவங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது உள்ள நிலையில், குறிப்பிட்ட அளவிலான தொழிலாளர்கள் பாதுகாப்பான தொழிலாளர் விதிகளுக்கு கீழே வேலைசெய்து வருவதாகவும், ஆனால் அமைப்புசாரா தொழிலாளர்கள் பலர் இத்தகைய பாதுகாப்பு ஏதும் இல்லாமல் இருப்பதாகவும் உலக வங்கியின் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவி மாபெரும் வேலைவாய்ப்பு உருவாக்கத்துறையான பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவில் வேலைக்கு செல்பவர்களில் 5%-ஐ மட்டுமே பணிக்கு வைத்திருப்பது பற்றியும் உலக வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய அரசின் பட்ஜெட் வெளியிடப்பட்டு 15 நாட்கள் கூட ஆகாத சூழ்நிலையில் இந்திய அரசை எச்சரிக்கை விடுக்கும் வகையில் உலக வங்கியிடம் இருந்து அறிக்கை வந்துள்ளது. சமீபத்தில் பட்ஜெட் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, புதிய இந்தியாவில் இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், தொழில்முனைவர்களாக இருக்கின்றனர் என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போதைய தேவை சுயதொழில் இல்லை, வேலைவாய்ப்பு உருவாக்கமே என உலக வங்கி ஆய்வறிக்கை அளித்திருப்பது கவனிக்கத்தக்கது.