பெரியார், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆரின் கொள்கைகளுக்கே தமிழகத்தில் மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளதை சுட்டிக் காட்டியிருக்கும் அமைச்சர் ஜெயக்குமார், சந்தேகத்திற்கு இடமின்றி தமிழகம் பெரியார் மண் தான் எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க முதல்வர் நேரம் ஒதுக்கியதற்கு காரணம் தமிழர்களின் பண்பாடு தான் என்று குறிப்பிட்டார்.
போக்குவரத்துக் கழகத்தை சீரழித்ததே திமுகதான் என விமர்சித்த அவர், அதிமுகவை கையாலாகாத அரசு என்று விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடியை ஏன் அழைக்கவில்லை என ஸ்டாலின் கேள்வி எழுப்புவது உள்நோக்கம் கொண்டது என்றும்
ஜெயக்குமார் விமர்சித்தார்.
யாரை எந்த நிகழ்ச்சிக்கு எப்போது அழைக்க வேண்டும் என்பது அதிமுகவினருக்கு தெரியும் எனத் தெரிவித்த அவ்வர், இதுபற்றி ஸ்டாலின் எங்களுக்கு கற்றுத் தரத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.