வால்பாறையில் சிறுவனை கொன்ற சிறுத்தைப்புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள நடுமலை எஸ்டேட்டில் கடந்த வாரம் மாலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் செய்துல் என்பவரை சிறுத்தைப்புலி இழுத்துச் சென்றது.
இதையடுத்து பொதுமக்களும் வனத்துறையினரும் சேர்ந்து சுமார் 2 மணிநேரங்களுக்கும் மேலாக கையில் தீப்பந்தங்கள் மற்றும் டார்ச் வெளிச்சத்தில் சிறுவனை தேடினர்.
இறுதியில் வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் தேயிலைச் செடிக்குள் சிறுவன் காயங்களுடன் இறந்துகிடந்தான். குழந்தையை கொன்ற சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதன்படி சிறுத்தைப்புலியை பிடிப்பதற்கு 4 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டன. இந்நிலையில் இன்று அதிகாலை நடுமலை எஸ்டேட்டில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தைபுலி சிக்கியது. இதனால் பொதுமக்கள் அனைவரும் நிம்மதியடைந்தனர்.