சனி, 17 பிப்ரவரி, 2018

ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..! February 17, 2018

Image

தென் இந்திய மொழிகளுள் ஒன்றான தெலுங்கு மொழியில் உள்ள எழுத்து ஒன்று ஆப்பிள் நிறுவனத்தின் மென்பொருளுக்குள் புகுந்து அதனை செயல் இழக்கச் செய்த சமபவம் மென்பொருள் வல்லுநர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மென்பொருளுக்குள், ஒரு குறிப்பிட்ட தெலுங்கு எழுத்து புகுந்து ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் ஜி-மெயில் (gmail), வாட்ஸ் அப் (whatsapp) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற செயலிகளை செயல்படவிடாமல் செய்துள்ளது.

ஒரு ஆப்பிள் ஸ்மார்ட் போனிலோ அல்லது ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மடிக்கணிணி, கணிணி அல்லது கைகடிகாரம் போன்ற பொருட்களிலும் தெலுங்கு மொழியில் நோட்டிஃபிகேஷன் வந்துள்ளது. அந்த தெலுங்கு எழுத்துக்களுக்குள் ஒரு குறிப்பிட்ட எழுத்து மட்டும் ஆப்பிள் மென்பொருளுக்குள் புகுந்து ஒட்டுமொத்த செயலியையும் செயல்படவிடாமல் தடுத்துள்ளது. 

ஆப்பிள் தயாரிப்புகளில் உள்ள மென்பொருளில் ஏற்பட்ட இந்த கோளாறு, முதலில் இத்தாலியின் மொபைல் உலகம் (Mobile World) என்னும் இணையதளத்தில் கண்டறியப்பட்டது. இதனால் தெலுங்கு எழுத்துகளை பயன்படுத்தி யாராவது குறுந்தகவல் அனுப்பியிருந்தால், அந்த ஒட்டுமொத்த உரையாடலையும், அழித்துவிடுமாறு, ஆப்பிள் பயன்பாட்டாளர்களிடம் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இந்த பிழை மூலம் பாதிப்படைந்த கைப்பேசி மற்றும் பிற சாதனங்களில் அவர்களுக்கு தேவையானவற்றை மீண்டும் பதிவு செய்துகொள்ளுமாறு தெரிவித்துள்ளது.

உலகில், 8 கோடி மக்களால் பேசப்படும் மொழியாக தெலுங்கு இருக்கிறது. பெரும்பாலானவர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலத்தை சேர்ந்தவர்கள். எனவே, இப்பிழையை, விரைவில் சரி செய்யவேண்டிய சூழ்நிலையில் ஆப்பிள் நிறுவனம்  இருக்கிறது. எனினும், சில பீட்டா பதிப்புகளில் (Version) இப்பிரச்சனை சரிசெய்யப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் ஆப்பிளின் அனைத்து மென்பொருள் பதிப்புகளிலும் சரி செய்யப்படும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே விலை மலிவான இந்திய மற்றும் சீன நிறுவன கைப்பேசிகளை அதிகமாக வாங்கும் இந்தியர்கள், ஆப்பிள் நிறுவனத்தின் இதுபோன்ற பிரச்சனையால், ஆப்பிள் கைப்பேசியை வாங்குவத்ற்கான எண்ணிக்கை குறையும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு, இதுபோன்ற பிரச்சனை அராபிக் மற்றும் மராத்தி போன்ற மொழிகாளால் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.