வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

ரவுடி பினு மிகப்பெரிய தாதாவானது எப்படி? February 9, 2018

Image

சென்னை அருகே ஒரே இடத்தில் 200க்கும் அதிகமான ரவுடிகளை தனது பிறந்தநாள் விழாவுக்கு வரவழைத்த ரவுடி பினு, மிகப்பெரிய தாதாவாக உருவெடுத்தது எப்படி?

கேரளாவிலிருந்து பிழைப்பிற்காக சென்னை வந்த பினு, 1990களில் கராத்தே பயிற்றுநராக இருந்ததாக கூறப்படுகிறது. கராத்தே பயிற்சி மூலம் கிடைத்த வருவாயில் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்த பினு, திடீரென ஒரு அடிதடி வழக்கில் கைதானார். அந்த வழக்கிற்காக ஏகப்பட்ட பணத்தை செலவு செய்து விடுதலையான பினு, அரும்பாக்கத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருடன் கை கோர்த்தார்.

இந்த நட்பு நாளடைவில் பினுவை ரவுடித் தொழிலில் ஈடுபட வைத்தது. ராதாகிருஷ்ணனும், பினுவும் இணைந்து மாமூல் வசூலில் இறங்கினர். பின்னர் படிப்படியாக ஆள் கடத்தல், கொலை போன்ற குற்ற செயல்களில் இறங்கினர். இருவரும் அடிக்கடி சிறை சென்று வந்த நிலையில், ஒரு முறை பினு சிறைக்கு சென்று திரும்பிய போது இருவருக்குமிடையே மாமுல் பணம் வசூலிப்பதில் பிரச்னை ஏற்பட்டு பிரிந்தனர்.

அதன்பிறகு பினு ஒரு தனி அணியாகவும், ராதாகிருஷ்ணன் ஒரு தனி அணியாகவும் செயல்பட்டு வந்தனர். பினுவின் மீது 1998ம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டுவரை சூளைமேடு, விருகம்பாக்கம், பூந்தமல்லி, வடபழனி போன்ற காவல்நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 15 வழக்குகள் 
பதியப்பட்டுள்ளன.

இதில் 9 வழக்குகளில் பண பலத்தால் தன்னை விடுவித்துக் கொண்ட பினு, ஒரு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை சென்று வந்துள்ளார். கல்லீரல் பாதிக்கப்பட்ட பினு கேரளாவுக்குச் சென்று கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதையடுத்து உடல் நலம் தேறி மீண்டும் சென்னை வந்த பினு தனது ரவுடி சாம்ராஜ்ஜியத்தை விஸ்தரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 

இதற்கு கைமேல் பலனாக சென்னையில் நடைபெற்ற ஒரு பிரச்னையை தீர்த்து வைத்ததில் ரவுடி பினுவுக்கு ஒரு கோடி வரை பணம் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதனைக் கொண்டாடும் விதமாக தனக்கு நெருக்கமான ரவுடிகளுக்கு பார்ட்டி வைப்பதற்காக, பினு திட்டமிட்டார். இதற்கு அவர் தேர்வு செய்த இடம்தான் மாங்காடு அருகே உள்ள மலையம்பாக்கத்தில் உள்ள லாரி ஷெட்.

அந்த இடம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த காரணத்தாலும், வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையை ஒட்டியே இருப்பதாலும் அனைவரும் வர வசதியாக இருக்கும் என்று கருதப்பட்டது. பினுவின் ஆரம்பக்கால நண்பர்கள் முதல் தற்போதைய கூட்டாளிகள் வரை அனைவருக்கும் எஸ்.எம்.எஸ்ஸில் அழைப்பு விடுக்கப்பட்டது. பினுவுக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு அவரே போன் செய்து அழைப்புவிடுத்தார்.

அதன்படி, அனைவரும் லாரி ஷெட்டுக்கு வந்து பிறந்தநாள் மது விருந்தில் திளைத்தனர். அரிவாளால் கேக்கை வெட்டி பினுவும் தன்னுடைய கூட்டாளிகளை உற்சாகப்படுத்தினார். இதனிடையே, பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த ரவுடிகளில் ஒருவரான பள்ளு மதன் என்பவர் மாங்காடு அருகே நடைபெற்ற வாகன சோதனையில் சிக்கினார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் மலையம்பாக்கம் கிராமத்தில் ரவுடி பினு உள்ளிட்ட சுமார் 200 ரவுடிகள் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன் பின்னரே, காவல்துறையினர் மிகப்பெரிய படையுடன் சென்று அங்கிருந்த ரவுடிகளை சுற்றிவளைத்துப் பிடித்தனர். இதனிடையே, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு ஒரு சில நிமிடங்கள் முன்பாக, பினுவின் செல்பேசிக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், அதில் அவர் இருக்கும் இடத்திற்கு போலீஸ் வருவது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தப்பியோடிய பினு, கனகு, விக்கி உள்ளிட்டோரை பிடிக்க 4 தனிப்படைகளை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் ரவுடிகள் கைது செய்யப்பட்ட இடத்தில் உள்ள குளம் ஒன்றில், 400 கிலோ செம்மரக்கட்டைகள் பதுக்கிவைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட செம்மரக்கட்டைகள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து லாரி ஷெட்டின் உரிமையாளரான திண்டிவனத்தைச் சேர்ந்த வேலு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.