உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் நாளில் 1.8 லட்சம் மாணவர்கள் பங்கு கொள்ளாமல் புறக்கணித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பள்ளி பொதுத்தேர்வுகள் நடத்துவதில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை அடுத்து 1.8 லட்சம் மாணவர்கள், முதல் நாள் தேர்வை எழுதாமல் புறக்கணித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, கடந்த செவ்வாய் கிழமை (06-02-2018) துவங்கியது.
வருகின்ற மார்ச் 12ம் தேதி வரை நடைபெறும் இந்த தேர்வில், காப்பி அடித்தல், தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தல், தேர்வு முடிந்த பிறகு விடைத்தாளை சட்ட விரோதமாக மாற்றுதல் பிற விதி மீறல் நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது என்பதற்காக, தேர்வு அறையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க உள்ளூர் உளவுத்துறையின் உதவியையும் கல்வித்துறை நாடியுள்ளது.
36 லடசத்து 55 ஆயிரத்து 691 பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 29,81,327 பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் என மொத்தம் 66,37,018 மாணவர்கள் தேர்வுக்கு பதிவு செய்திருந்த நிலையில், அரசின் நடவடிக்கைகளால் ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வை புறக்கணித்துள்ளது மாணவர்களிலொ பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் உத்தரப்பிரதேசத்தில் கடந்த பல ஆண்டுகளாக பொதுத் தேர்வுகளில் பல அத்துமீறல்களும் சட்டவிரோதமான ஆள்மாறாட்டங்களும் நடைப்பெற்றுவருவதாலேயே தற்போதைய அரசு பல அதிரடி முடிவுகளை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. நீட் தேர்வு போன்ற தேசிய தகுதித் தேர்வுகளை எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுக்கொண்ட வட மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேசத்தின் பள்ளி பொதுத்தேர்வில் மாணவர்கள் இவ்வாறு செயல்பட்டு இருப்பது அம்மாநில கல்வியின் தரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கைகளுக்கு அடுத்தும், ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் காப்பி அடித்து பிடிபட்டனர் என்றும் 5.94 லட்சம் மாணவர்கள் தேர்வு அறையை விட்டு வெளியேறினர் என்றும் துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.