வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

தரவரிசையில் பின் தங்கிய IIT-Madras! February 9, 2018

Image

டைம்ஸ் உயர்க் கல்வி பத்திரிக்கை வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் மெட்ராஸ் ஐ.ஐ.டி மிகவும் பின் தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

ஆசியாவில் உள்ள சிறந்த 350 உயர்க்கல்வி நிறுவனங்களின் பட்டியலை, டைம்ஸ் உயர் கல்வி பத்திரிக்கை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில்,42 இந்திய உயர்க்கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றிருக்கிறது.

பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் (IISc) மற்றும் மும்பை ஐ.ஐ.டி, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு, 29வது மற்றும் 44வது இடங்களில் உள்ளது.

இப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும், IIT-Madras கல்வி நிறுவனத்தின் செயல்திறன் இந்த ஆண்டு கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு 41வது நிலையில் இருந்த IIT-Madras இந்த ஆண்டு 103 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

மேலும், Indian School of Mines, 141 வது இடத்திலும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் 194 வது இடத்திலும் இப்பட்டியலில் புதிதாக இடம்பெற்றிருப்பது இந்தியாவிற்கு பெருமை அளிப்பதாக இருக்கிறது.

கற்பித்தல், ஆராய்ச்சி, அறிவுப் பரிமாற்றம் மற்றும் சர்வதேச கட்டமைப்பு, இப்பட்டியலில் முக்கிய காரணிகளாக இருக்கிறது.

ஆராய்ச்சி சூழலில் பின் தங்கி இருந்தாலும், ஆராய்ச்சி உற்பத்தித்திறனில் இந்திய நிறுவனங்கள் மேம்பட்டு இருப்பதால் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வடக்கு ஆசிய நிறுவனங்கள் இப்பட்டியளில் இடம்பெறுவது அதிகரித்துள்ளது என்றாலும் அதன் நிலையை தக்கவைக்க கிழக்கு மற்றும் தென் கிழக்கு நாடுகளுக்கிடையே கடும் போட்டிகள் நிலவி வருகின்றன என்று டைம்ஸ் உயர்கல்விப் பத்திரிக்கை ஆசிரியர் பில் பாட்டி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் 33 இந்தியக் கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 42 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.