வெள்ளி, 9 மார்ச், 2018

சென்னை கே.கே. நகரில் கல்லூரி வாசலிலேயே மாணவி குத்திக் கொலை! March 9, 2018

Image

சென்னையில் கல்லூரி வாயிலில் மாணவி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கே.கே நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில், மதுரவாயலைச் சேர்ந்த அஸ்வினி என்ற மாணவி பிகாம் 2ம் ஆண்டு படித்து வந்தார். அவர் வகுப்பு முடிந்து இன்று மாலை வீடு திரும்பிய போது, கல்லூரி வாயிலில் இளைஞர் ஒருவர் அவரை கத்தியால் குத்தினார். 

இதில் படுகாயமடைந்த அஸ்வினியை மீட்டு அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பின்னர் கத்தியால் குத்திய இளைஞரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

ஆனால் அவரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் அவரை அடித்து, உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்தவர் செஞ்சியை சேர்ந்த அழகேசன் என்பது தெரியவந்தது. 
மதுரவாயல் பகுதியில் தங்கி வேலைக்குச் சென்று வரும் அழகேசன், அஸ்வினியை காதலித்து வந்துள்ளார். இவர்களின் திருமணத்துக்கு அஸ்வினியின் தாய் சம்மதம் தெரிவித்த நிலையில், தாத்தா எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 

இதனால், தாத்தா சொல்லைக் கேட்ட அஸ்வினி திருமணத்துக்கு மறுத்துள்ளதாக தெரியவருகிறது. இதனால் ஆத்திரமடைந்த அழகேசன், ஒரு மாதத்துக்கு முன்னர் அஸ்வினிக்கு கட்டாயத் தாலி கட்டியுள்ளார். 

இதனால், அஸ்வினி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் அவரிடம் விசாரித்து, பின்னர் இரு தரப்பையும் அழைத்து சமரசம் செய்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது. 

ஆனாலும், அஸ்வினி தன்னை திருமணம் செய்ய மறுத்த ஆத்திரத்தில் இருந்த அழகேசன், அவரை தீர்த்துக் கட்ட திட்டம் போட்டு, இன்று கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார். 

சென்னையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மாணவி ஒருவர் கல்லூரி வாயிலிலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts: