வெள்ளி, 9 மார்ச், 2018

யானைகள் - மனித எதிர்கொள்ளலை தவிர்க்க புதிய முறையை கண்டறிந்த வனத்துறை! March 9, 2018

Image

விவசாய பயிர்களை யானைகளிடம் இருந்து காக்க, தொங்கும் சோலார் மின்வேலி அமைக்கும் திட்டத்தை விவசாயிகளுக்கு வனத்துறை பரிந்துரைத்துள்ளது. 

தமிழகத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில், காட்டு யானைகளின் ஊடுருவலும் இதனால் ஏற்படும் மனிதர்கள், யானை இடையிலான மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. 

இந்த எதிர்கொள்ளல் சம்பவங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில் கடந்த சில மாதங்களாக இப்பிரச்சனை மிகத் தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளது. 

அதிர்ச்சிகர புள்ளிவிவரம்:

இதனால் காட்டை விட்டு வெளியேறி ஊருக்குள் யானைகள் ஊடுருவுவதால், விவசாயப் பயிர் சேதம், யானை மனித மோதலால் இரு தரப்பிலும் ஏற்பட்டுள்ள உயிர் சேதங்கள் குறித்து வனத்துறையும் தன்னார்வலர் அமைப்புகளும் இணைத்து நடத்திய கள ஆய்வில் கடந்த 12 மாதத்தில் மட்டும் காட்டை விட்டு வெளியேறிய யானைகள் 1,806 முறை ஊருக்குள் ஊடுருவியுள்ளதும், இதனால் இப்பகுதியில் பயிரிடபட்டிருந்த சுமார் 45 சதவிகித பயிர்கள் சேமடைந்துள்ளதோடு இவற்றை விரட்ட முயன்ற மோதலில் 19 மனிதர்கள் மற்றும் 22 யானைகள் உயிரிழந்துள்ளது தெரியவந்தது. இந்த புள்ளிவிபரம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

யானைகளின் ஊடுருவலை தடுக்க வனத்துறையினரால் செயல்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் தோல்வியில் முடிந்ததே இதற்கு முக்கிய காரணம் என குற்றச்சாட்டும் எழுந்தது. 

இந்நிலையில், பல்வேறு சோதனை முயற்சிகளுக்கு பின்னர் யானைகளால் துண்டிக்கப்பட முடியாத தொங்கும் சோலார் மின்வேலி அமைக்கும் ஒரு புதிய யுக்தியினை தற்போது அறிமுகப்படுத்தி அதனை  வனத்துறை விவசாயிகளுக்கு பரிந்துரைத்து வருகிறது.

பழைய முறை:

சாதாரண கம்பி வேலிகளைப்போல தரையில் இருந்து 5 அடி உயரத்தில் நீளவாக்கில் இழுத்துக்கட்டும் சோலார் மின்வேலிகளை யானைகள் மிக தந்திரமாக அருகில் உள்ள மரங்களை அதன் மீது பிடுங்கிப்போட்டு சாய்த்துவிடும் அல்லது தனது உடலில் மின்சாரம் பாயாதவாறு தனது தந்தங்களினால் கம்பிகளை துண்டித்து விடும். 

புதிய முறை:

ஆனால் புதிய முறைப்படி சுமார் 12 அடி உயரத்தில் ஒரே ஒரு கம்பியினை நீளவாக்கில் இழுத்துக்கட்டி அதில் இருந்து இணைப்பு கொடுத்து கீழ்நோக்கி ஒரு அடி இடைவெளியில் தொடர்ச்சியாக கம்பிகளை தொங்க விட்டு விடுகின்றனர். பிடிமானமில்லாமல் ஆடியபடி அந்தரத்தில் தொங்கும் கம்பிகளை எந்த வகையிலும் யானைகளால் துண்டிக்க முடிவதில்லை. 

இவ்வேலியினை கடக்க முயற்சித்தால் ஒரே நேரத்தில் பல கம்பிகள் உடலை சுற்றிவிடும் என்ற அச்சம் காரணமாக இவ்வகை மின்வேலிகளை கண்டாலே அதன் அருகில் கூட வராமல் யானைகள்  ஓடுவதாக தெரிவிக்கின்றனர் வனத்துறையினர்.

பெருகும் ஆதரவு:

யானைகளின் ஊடுருவல் அதிகமாக உள்ள மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் போன்ற பகுதிகளில் பலரும் தங்களது விவசாய நிலங்கள் மற்றும் நிறுவனங்களை சுற்றி தொங்கும் மின்வேலிகளை அமைத்து வருகின்றனர். ஆனால், யானைகளின் நுழைவை பெருமளவு தடுத்து பயனளிக்கும் இந்த தொங்கும் மின்வேலியினை ஒரு ஏக்கர் சுற்றளவுக்கு அமைக்க ரூபாய் மூன்று லட்சம் வரை செலவாவதால் இதனை அனைவராலும் அமைக்க இயலவில்லை என வருத்தம் தெரிவிக்கும் சிறு, குறு விவசாயிகள், தங்களுக்கு இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு மானிய விலையில் இதற்கான உபகரணங்களை வழங்கி உதவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை:

யானைகளால் ஏற்படும் மனித உயிர் இழப்புகள் மற்றும் பயிர் இழப்புகளுக்கு பல லட்ச ரூபாய்களை இழப்பீடாக வழங்கி வரும் அரசு, இவற்றை கட்டுப்படுத்தும் இது போன்ற புதிய திட்டங்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் வலியுறுத்துகின்றனர். 

இந்த புதிய திட்டத்தால் மனித யானை மோதல்கள் குறைந்து விலைமதிப்பற்ற மனித உயிர்கள் மட்டுமின்றி சட்ட விரோத மின்வேலிகளால் இறந்து போகும் யானைகளின் எண்ணிக்கையும் குறையும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. 

Related Posts: