வெள்ளி, 6 ஏப்ரல், 2018

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 4வது பதக்கம்! April 6, 2018

Image

பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீரர் தீபக் லேதர் வெண்கலம் வென்றிருப்பதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

ஆண்களுக்கான பளுதூக்குதல் 69 கிலோ எடைப்பிரிவில் ஹரியானாவைச் சேர்ந்த 18 வயதான இளம் வீரர் தீபக் லேதர் ஸ்னேட்ச் முறையில் 136 கிலோ மற்றும் கிளீன் & ஜெரிக் முறையில் 159 கிலோ என ஒட்டுமொத்தமாக 295 கிலோ எடை தூக்கி வெண்கலம் வென்றார். இதன் மூலம் இப்பிரிவில் மிகக் குறைந்த வயதில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியர் என்ற முத்திரையை பதித்துள்ளார் தீபக்.

இந்த பிரிவில் 299 கிலோ எடை தூக்கி வேல்ஸ் வீரர் கேரத் இவான்ஸ் தங்கமும், 297 கிலோ எடை தூக்கி இலங்கை வீரர் இந்திகா திசனாயகே வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.

முன்னதாக பளுதூக்குதலில் சஞ்சிதா சானு இரண்டு தங்கமும், குருராஜா வெள்ளிப்பதக்கமும் வென்றிருந்த நிலையில் தீபக் லேதரின் வெண்கலத்துடன் இந்தியா 4 பதக்கங்கள் பெற்று பதக்கப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

யார் இந்த தீபக் லேதர்:

ஹரியானாவைச் சேர்ந்த தீபக் லேதர் (வயது 18) விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். விவசாய நிலங்களுக்காக உர மூட்டைகளை அனாயசமாக தீபக் தூக்கிச் செல்வதைக் கண்ட தீபக்கின் தந்தை அவரை 9 வயதிலேயே பளுதூக்கும் பயிற்சிக்கு அனுப்பி வைத்தார்.

தனது 9 வயது முதலே பளுதூக்குதல் பயிற்சியில் ஈடுபட்டு வந்த தீபக் தற்போது முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்றிருப்பது அவரின் குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு இந்திய விளையாட்டு ஆணையத்தின் சார்பாக பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு புனே பயிற்சி மையத்திற்கு சென்ற தீபக் முதலில் டைவிங் விளையாட்டில் ஈடுபட வைக்கப்பட்டுள்ளார். பின்னர்  மீண்டும் பளுதூக்குதலில் கவனம் செலுத்தி தற்போது காமன்வெல்த் பதக்கத்தையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.