புதன், 4 ஏப்ரல், 2018

முழு அடைப்பு போராட்டத்துக்கு இரண்டு வணிகர் சங்கங்களும் ஆதரவு! April 4, 2018

Image

காவிரி வாரியம் அமைக்கக் கோரி தமிழகமெங்கும் வியாழன் அன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் விக்கிரமராஜா, காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதாக குற்றம்சாட்டினார். 

திமுக சார்பில் நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பு ஆதரவு அளிக்கும் எனவும் அவர் கூறினார். 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நேற்று நடைபெற்ற போராட்டத்தால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விக்கிரமராஜா தெரிவித்தார். 

இதனிடையே நாளைய முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையும் ஆதரவு தெரிவித்துள்ளது. 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் வெள்ளையன், ஏப்ரல் 11ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அன்றைய தினம் போராட்டம் நடத்த ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதாக கூறினார். 

ஆனால் அவரது பயணம் தற்போது கேள்விக்குறியாக உள்ளதால், நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் வெள்ளையன் கூறினார்.

வணிகர் சங்கங்களின் இந்த போராட்டம் காரணமாக நாளை அனைத்து கடைகளும் இயங்காது என்பதால் பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை இந்த முழு அடைப்பு ஏற்படுத்தும்.

Related Posts: