ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் போராட்ட களமாக மாறியுள்ளது..! April 8, 2018

Image

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்றும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. ஈரோடு மாவட்டம் கொடுமுடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று ரயில் மறியலில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அடுத்த பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். இதனால் மின்சார ரயில், தாமதமாக புறப்பட்டு சென்றது.

திருவள்ளூர் மாவட்டம் நல்லூரில் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சோழவரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

தமிழக-கர்நாடக எல்லையான தாளவாடி வழியாக கர்நாடகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட போவதாக நாம் தமிழர் கட்சியினர் அறிவித்தனர். இதன்படி சத்தியமங்கலத்தில் இருந்து வாகனப்பேரணியாக புறப்பட்ட நாம் தமிழர் கட்சியினரை  பண்ணாரி சோதனைச்சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, தடையை மீறி சென்ற 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.