வெள்ளி, 13 ஏப்ரல், 2018

ஆசிஃபாவின் குரல்

ஆலயங்களில் கேட்கிறது ஆசிஃபாவின் குரல்
....................
மனுஷ்ய புத்திரன்
.....................................
ஒரு பெண்ணை அழிக்கும் வழிமுறைகள்
எப்போதும் நாம் அறிந்ததைவிடவும்
ஒவ்வொரு முறையும்
புதிராக இருக்கிறது
அல்லது மனம் உடையச் செய்வதாக இருக்கிறது
ஒரு நாடோடி சிறுமியை கொல்ல
அவளைக் கூட்டுப் புணர்ச்சிக்கு ஆளாக்க
ஒரு கோயிலின் கருவறை வாசலைத் திறக்கிறார்கள்
உணவன்றி தன்ணீரின்றி
அவளை கட்டி வைக்கிறார்கள்
ஒரு வேட்டையாடிய பறவையை
ஒரு புதர் மறைவில் வைத்து நெருப்பில் சுடுவதுபோல
அவளை தெய்வத்தின் காலடியில் வைத்துப் புணர்கிறார்கள்
ஒரு வயோதிகன்
ஒரு எட்டு வயது சிறுமியைப் புணர்கிறான்
பிறகு ஒரு சிறுவன் அவளைப் புணர்கிறான்
பிறகு அவளை தேட வந்த போலீஸ்காரன் அவளைப் புணர்கிறான்
பிறகு யார் யாரோ அவளைப் புணர்கிறார்கள்
அந்தச் சிறுமிக்கு அதன் அர்த்தம்கூட தெரியாது
வனத்தில் தனது மேய்ச்சல் குதிரையைத் தேடிவந்தவளை
அவர்கள் ஒரு கொடும் இருளை நோக்கி
இடையறாத ரத்தப் பெருக்கை நோக்கி
நடத்தி சென்றார்கள்
எனக்கு இது மீண்டும் புரியாமல் போகிறது
நிர்பயாவை ஓடும் பேருந்தில் வைத்து
வன்புணர்ச்சி செய்தவர்கள்
பிறகு ஏன் அவளது பிறப்புறுப்பில்
ஒரு இரும்புக்கம்பியை சொருகினார்கள் என்று
ஆயிரம் முறை கேட்டும்
அந்தக் கணம் முழுமையாக விளக்கப்படாமல் இருக்கிறது
ஆசிஃபாவை கோயில் பிரகாரத்தின்
தூணில் கட்டி வைத்து
மயக்க மருந்து கொடுத்து
உணவளிக்காமல்
வரிசையாக
வன்புணர்ச்சி செய்தவர்கள்
பிறகு ஏன் அவளது பிஞ்சுக் கால்களை முறித்தார்கள்?
ஏன் அவளது தலையில்
க.ல்லைப்[போட்டு கொன்றார்கள்?
சிறுமியாக இருந்தாலும் அவள் ஒரு பெண்
அதுவும் அழிக்கபபடவேண்டிய ஒரு இனத்தின் பெண்
நாடோடியாக மேய்ச்சல் நிலங்களில் நிராதரவாக தூங்குபவள்
அவளை வேட்டையாடுவது சுலபம்
பெரும்பான்மையினால்
வெகு சுலபமாக துடைத்தழிக்கக்கூடிய
சிறுபான்மையினள்
இது மட்டும்தானா
அல்லது
இன்னும் காரணங்கள் இருக்கின்றனவா?
நம் தெய்வங்கள் எப்போதும்போல
கண்களற்றவையாக இருக்கின்றன
காதுகளற்றவையாக இருக்கின்றன
இதயமற்றவையாக இருக்கின்றன
தன் காலடியில் ஒரு சிறுமி
கூட்டாக வன்புணர்ச்சி செய்யபடும்போதும்
அவை மெளனமாக உறங்கிக் கிடக்கின்றன
ஆனால் இந்த தேசம்
இப்போது தெய்வத்தின் பெயரால்
ஆளப்படுகிறது
குற்றவாளிகளை விடுவிக்கும்படி
தேசியக்கொடியுடன் ஊர்வலம் போகிறார்கள்
தேச பக்தர்கள்
ஆசிஃபா
பாரதமாதாவின் சிறுவயது தோற்றம் இல்லையா?
நிர்பயாவைப்போல அவளும் இந்தியாவின்
வயதில் சிறிய மகள் இல்லையா?
நாம் தேச பக்தியைப் புரிந்துகொள்ள
வேறு வழிகளும் இருக்கின்றன
வெறுப்பு அவர்களை ஆள்கிறது
வெறுப்பு அவர்களை வழி நடத்துகிறது
குற்றவாளிகளை கைது செய்யவிடாமல்
போராடிய பெண்களின் புகைப்படங்களி கண்டேன்
அதில் ஆசிஃபாவின் வயதுடைய மகள்களின்
அன்னையரும் இருந்தனர்
அதில் ஒரு பெண்
’’ அவர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள்
குற்றவாளிகளை விடுவிக்கவில்லையென்றால்
எங்களை நாங்களே கொளுத்தி கொள்வோம்’’
என்றாள்
இப்படித்தான்
குஜராத்தில்
பெண்களின் வயிற்றிலிருந்து சிசுக்கள்
சூலாயுதத்தால் குத்திக் கிழிக்கப்பட்டபோது
குற்றவாளிகளிளுக்கு
ஆயுதங்கள் சேகரித்து தந்த பெண்களைப் பற்றியும்
வீடுகளையும் மனிதர்களையும் எரிக்க
பெட்ரோல் கேன்களைக் கொண்டு வந்த
அன்னையரைப்பற்றியும் படித்தேன்
நாம் தாய்மையைப்புரிந்துகொள்ள
வேறு வழிகளும் இருக்கின்றன
வெறுப்பு அவர்களை ஆள்கிறது
வெறுப்பு அவர்களை வழி நடத்துகிறது
ஆசிஃபா ஒரு நாடோடி
அவளது இனக்குழுவின் குதிரைகளை
அவர்கள் செல்லுமிடமெல்லாம்
நேர்த்தியாக பார்த்துகொண்டதால்
அந்த இனக்குழுவின் செல்ல மகளாக இருந்தாள்
ஆசிஃபாவை புதைப்பதற்கு
கொலைகாரர்கள் நிலத்தை மறுத்தார்கள்
ஆசிஃபாவின் ரத்தகறை படிந்த உடலுடன்
விந்துக்கறை படிந்த உடலுன்
நாடோடிகள் ஒரு புதை நிலம் தேடி
அந்தியின் இருளில்
வெகுதூரம் கூட்டமாக நடக்கிறர்கள்
வரலாற்றில் எதுவும் மாறிவிடவில்லை
நாம் எதிலிருந்தும் முன்னேறி வந்துவிடவில்லை
இனங்களை வெல்ல பெண்கள் வெல்லப்பட்டார்கள்
மதங்களை வெல்ல பெண்கள் வெல்லப்பட்டார்கள்
நாடுகளை வெல்ல பெண்கள் வெல்லப்பட்டார்கள்
நிலங்களை வெல்ல பெண்கள் வெல்லப்பட்டார்கள்
பெண்களின் கசக்கப்படும் முலைகளில்
நம் தேசங்கள் எழுகின்றன
பெண்களின் கிழிக்கப்படும் யோனிகளில்
நம் தெய்வங்கள் வாழ்கின்றன
ஆலயங்களில் தெய்வத்தின் குரல் கேட்டதே இல்லை
இப்போது கேட்கிறது ஆசிஃபாகளின் குரல்
13.4. 2018
பகல் 2..06
மனுஷ்ய புத்திரன்
( காஷ்மீரில் ஆஃஃசிபா என்ற எட்டு வயது குஜ்ஜர் நாடோடி இன இஸ்லாமிய சிறுமி இந்துத்துவாவாதிகளால் கடத்தப்பட்டு ஒரு கோயிலில் வைத்து தொடர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டாள். )