வெள்ளி, 13 ஏப்ரல், 2018

காவிரி உரிமை மீட்புப் பயணத்தை கடலூரில் நிறைவு செய்தார் ஸ்டாலின்! April 13, 2018

Image

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தமிழகத்தின் போராட்டம் ஓயாது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திருச்சி முக்கொம்பு பகுதியில் கடந்த 7ம் தேதி கூட்டணி கட்சித் தலைவர்களுடன் காவிரி உரிமை மீட்புப் பயணத்தை தொடங்கிய ஸ்டாலின், கடலூர் மாவட்டத்தில் நேற்றிரவு அதனை நிறைவு செய்தார். 

இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்திற்கு, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன், மதிமுக பொதுசெயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

திருமாவளவன்:

கூட்டத்தில் உரையாற்றிய திருமாவளவன், கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பிரதமர் மோடி துரோகம் இழைப்பதாக குற்றம்சாட்டினார்.

வைகோ:

அதனைத் தொடர்ந்து பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதியை குழிதோண்டிப் புதைத்து விட்டதாக குற்றம்சாட்டினார். தலைமை நீதிபதி மீதான விமர்சனத்திற்காக தம் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டாலும் அதனை சந்திக்க தயார் எனத் தெரிவித்த வைகோ, மீண்டும் ஒருமுறை நரேந்திர மோடியால் பிரதராக முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின்:

அதனைத் தொடர்ந்து பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தமிழகத்தின் போராட்டம் ஓயாது எனக் குறிப்பிட்டார். 

தமிழகம் வந்த பிரதமர் மோடியை சால்வை அணிவித்து வரவேற்றதற்காக முதல்வர் பழனிசாமி வெட்கப்பட வேண்டும் எனக்கூறிய ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரதமரிடம் தனிப்பட்ட முறையில் 2 நிமிடங்கள் கூட முதல்வரால் பேச முடியவில்லை என்றும் விமர்சித்தார்.

காவிரி மீட்புப் பயணத்தை நிறைவு செய்யும் கடலூரில் இருந்து சென்னைக்கு வாகனப் பேரணி நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், எனினும், பொதுமக்களுக்கு அது இடையூறை ஏற்படுத்தும் என்ற காரணத்திற்காக வாகனப் பேரணியை கைவிட்டதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். 

சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்த இன்று சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக வலியுறுத்தப் போவதாகவும் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.