வியாழன், 1 அக்டோபர், 2020

பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்டு நடக்கவில்லை: அத்வானி உட்பட 32 பேரையும் விடுவித்து கோர்ட் உத்தரவு

 28 ஆண்டுகளுக்கு முன்பாக அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில், முன்னாள் பாஜக கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி ,உமாபாரதி, வினய் கத்தியார், முன்னாள் உத்தரபிரதேச முதல்வர் கல்யாண்சிங் உள்ளிட்ட 32 பேரை விடுதலை செய்வதாக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை அறிவித்தது.

500 ஆண்டுகள் பழமையான பாபர் மசூதி, முன்கூட்டியே திட்டமிட்டு இடிக்கப்படவில்லை என்றும், போதிய வலுவான ஆதாரங்கள் இல்லை என்பதாலும் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக சிபிஐ நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் கூறினார்.

குற்றஞ்சாட்டப்பட்ட  32 பேரில், 26 பேர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். அத்வானி, எம்.எம்.ஜோஷி, உமா பாரதி, சதீஷ் பிரதான், நிருத்யா கோபால் தாஸ்  கல்யாண் சிங் ஆகிய எஞ்சிய தலைவர்களுக்கு உடல்நலம் மற்றும் வயது காரணமாக  கலந்து கொள்வதில் காரணமாக விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே, கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. லக்னோவின் கைசர்பாக் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்குள் ஊடக நபர்கள் அனுமதிக்கப்படவில்லை.

சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக, அகில இந்திய இஸ்லாமியத் தனிநபர்ச் சட்ட வாரியச் செயலாளர் ஜபர்யாப் ஜிலானி தெரிவித்தார். “சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மிகவும் தவறானது. நாங்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்,”என்று கூறினார்.

 

ராம் ஜன்மபூமி இயக்கம் மீதான தனது தனிப்பட்ட  நம்பிக்கை, அர்ப்பணிப்பை நிரூபிக்கும் வகையில் தீர்ப்பு  உள்ளது என்று அத்வானி கூறினார்.  நீதிமன்றத்தின் தீர்ப்பு  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று முரளிமனோகர் ஜோஷி கூறினார்.

” 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி அயோத்தியில் நடந்த சம்பவம், திட்டமிட்ட  சதி செயல் இல்லை என்பதை இது நிரூபித்துள்ளது. எங்களது பேரணிகளும், இயக்க செயல்பாடுகளும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை. நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஸ்ரீராம ஜன்மபூமி கட்டுமானத்தைப் நினைத்து அனைவரும் உற்சாகம் கொள்வோம் ,” என்று ஜோஷி கூறினார்.

2019 உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கும், அரசியலமைப்பு  கருத்திற்கும் எதிராக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்தது.

செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா,”எந்தவொரு விலை கொடுத்தும்  அதிகாரத்தை கைப்பற்றும் வகையில், நாட்டின்  மதநல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் அழிக்க பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்களின் ஆழ்ந்த அரசியல் சதியை முழுநாடும் அறியும் ” என்று தெரிவித்தார்.

“இந்தியா அரசியலமைப்பு நெறிமுறைகள் மீது  ஏவப்பட்ட இந்த தாக்குதலில் அப்போதைய உத்தரபிரதேச பாஜக அரசு  கூட்டு சதி செய்தது. சத்திய பிரமாண வாக்குமூலத் தில் தவறான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்வதன் மூலம் உச்சநீதிமன்றம் தவறாக வழிநடத்தப்பட்டது.  அனைத்து உண்மைகளும், சான்றுகளும்  விரிவாக ஆராய்ந்த பின்னரே, பாபர் மசூதி சட்ட விரோதம்  இடிக்கப்பட்டது  என்று நீதிமன்றம்  உத்தரவிட்டது,”என்று கூறினார்.

“இந்த நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்கள் அனைவரும் நீதிமன்ற முடிவுகளை மதித்து வருகின்றனர். உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பில் கூட,”450 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட  பாபர் மசூதி  சட்டவிரோதமாக இடிக்கப்பட்டது” என்று தெளிவாக  கூறியது. இருப்பினும், மசூதி இடிப்புக்கான கிரிமினல் சதி குறித்த முடிவை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.  முஸ்லீம் அமைப்புகள் ஒன்றாக அமர்ந்து அதை (இன்றைய தீர்ப்பு) மேல்முறையீடு செய்ய வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்யும், ” என்று அகில இந்திய இஸ்லாமியத் தனிநபர்ச் சட்ட வாரிய உறுப்பினர் மவுலானா காலித் ரஷீத் பரங்கி மஹாலி தெரிவித்தார்.

 

அயோத்தியில் உள்ள ராமர் கோயில் இருந்த  தளத்தில்  பாபர் மசூதி கட்டப்பட்டதாக கூறி, 1992 டிசம்பர் 6 ஆம் தேதி கர சேவகர்களால்  பாபர் மசூதி  இடிக்கப்பட்டது. இச்சம்பவம் நாட்டின் பல பகுதிகளில் மோதல் போக்கைத்  தூண்டியது.  ஆங்காங்கே நடந்த மதக்கலவரத்தால் 2,000 மக்கள் மடிந்தனர். இதைத் தொடர்ந்து, அயோத்தியில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  பாபர் மசூதியை இடிப்பதற்கு சதிச்செயல் தீட்டியது, மக்களை தூண்டியது என இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ அப்போதைய பி.ஜே.பி. தலைவர் எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி  உமாபாரதி,  வினய் கத்தியார் அப்போதைய உத்தரபிரதேச முதலமைச்சர்  கல்யாண்சிங் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட 49 பேர் மீது சி.பி.ஐ. குற்றச்சாட்டு பதிவு செய்தது. இவர்களில் வழக்கு விசரணை காலத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.    எஞ்சிய 32 பேர் மீது லக்னோவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. நீதிமன்றம் 351 அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்தது.

2001 ஆம் ஆண்டில், குற்றம் சாட்டப்பட்ட 21 பேருக்கு எதிரான வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இருப்பினும், 2017  ஏப்ரல் 19 அன்று, சதி குற்றச்சாட்டு தொடர்பான விசரனனையை மீட்டெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் விசாரணையை இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கவும் உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டது.

 

 

கடந்த ஆண்டு, அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. அதே நேரத்தில் பாபர் மசூதி  சட்டவிரோதமாக இடிக்கப்பட்டதாகவும் கருத்து தெரிவித்தது. சன்னி வக்ஃப் வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கவும் தனது தீர்ப்பில் தெரிவித்தது.

“டிசம்பர் 6, 1992 அன்று, மசூதியின் கட்டமைப்பு தகர்க்கப்பட்டு மசூதி இடிக்கப்பட்டது.  இந்த செயல்  நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட உத்தரவாதத்தை மீறுவதாகும். மசூதியை  இடிக்கும் செயல் சட்டத்தின் மாண்பை மீறும் செயலாகும் ”என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.