அயோத்தி பாபரி மசூதி இடிப்பு வழக்கில், சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் பாஜக மூத்த தலைவர்களை விடுதலை செய்திருப்பது அரசியலமைப்பு மாண்பிற்கு எதிரானாது என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்தது.
இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா, ” சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, 2019 உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பிற்கும், ‘அரசியலமைப்பு மாண்பிற்கும்’ எதிரானது. மேலும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யுமாறு மத்திய மற்றும் உத்தரபிரதேச மாநில அரசை கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.
உத்தரபிரதேசத்தில் கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம், பி.ஜே.பி. தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் முரளிமனோகர் ஜோஷி உமாபாரதி, வினய் கத்தியார் அப்போதைய உத்தரபிரதேச முதலமைச்சர் கல்யாண்சிங் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட 32 பேரை விடுதலை செய்வதாக இன்று அறிவித்தது.
நவம்பர் 9, 2019 அன்று ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசசியலமைப்பு அமர்வு, ” பாபர் மசூதி இடிக்கப்பட்ட செயல் தெளிவான சட்டவிரோதம் என்றும், சட்டத்தின் விதிமுறைகள் வெளிப்படையாகவே மீறப்பட்டுள்ளது எனவும் தனது தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டது என்று காங்கிரஸ் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார்.
இருப்பினும், சிறப்பு நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடிவித்துள்ளது. சிறப்பு நீதிமன்றத்தின் இந்த முடிவு, இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிரானதாக அமைந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் , “எந்தவொரு விலை கொடுத்தும் அதிகாரத்தை கைப்பற்றும் வகையில், நாட்டின் மதநல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் அழிக்க பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்களின் ஆழ்ந்த அரசியல் சதியை முழுநாடும் அறியும். இந்தியா அரசியலமைப்பு நெறிமுறைகள் மீது ஏவப்பட்ட இந்த தாக்குதலில் அப்போதைய உத்தரபிரதேச பாஜக அரசு கூட்டு சதி செய்தது. சத்திய பிரமாண வாக்குமூலத்தில் தவறான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்வதன் மூலம் உச்சநீதிமன்றம் தவறாக வழிநடத்தப்பட்டது. அனைத்து உண்மைகளும், சான்றுகளும் விரிவாக ஆராய்ந்த பின்னரே, பாபர் மசூதி சட்ட விரோதமாக இடிக்கப்பட்டது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது” என்றும் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் மாண்புகளையும், மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வை வெளிபடுத்தும் ஒவ்வொரு இந்தியரும், மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
முன்னதாக, 2019, நவம்பர் 9 அன்று, ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஒரு மனதாக அயோத்தி பிரச்சினையில் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பு அடிப்படையில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் இந்திய அரசு இராமர் கோயிலை நிறுவ நிறுவவும், இசுலாமியர்கள் தொழுகை நடத்த அயோத்தியில் 5 ஏக்கர் நிலம் வழங்கவும் ஆணையிட்டது.