வியாழன், 1 அக்டோபர், 2020

துபாய், லண்டன் பயணிகள்தான் இந்தியாவில் கொரோனாவை பரப்பினார்களா?

  தொற்றுநோய் பரவுதலின் ஆரம்பக் கட்டத்தில், கொரோனா வைரஸை இந்தியாவில் பரப்பியதில் துபாய் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு என்று ஐஐடி மண்டி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட நோயாளிகளின் பயண வரலாற்றைப் பகுப்பாய்வு செய்யப் புள்ளிவிவர கருவிகள் (statistical tools) மற்றும் தனிப்பட்ட முறைகளை இந்த ஆராய்ச்சி பயன்படுத்தியிருக்கிறது.

‘தொற்றுநோயின் ஆரம்பக் கட்டத்தில் சோஷியல் நெட்வொர்க் வழியாக இந்தியாவில் கோவிட்-19 பரவுவதைக் கண்காணித்தல்’ என்ற தலைப்பில் உதவி பேராசிரியர் சரிதா ஆசாத் மற்றும் அவருடைய மாணவி சுஷ்மா தேவி ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, ஜர்னல் ஆஃப் டிராவல் மெடிசின் (Journal of Travel Medicine) இதழில் வெளியிடப்பட்டது.

ஆராய்ச்சி முறை

இந்தியா தன் முதல் கோவிட் வழக்கைப் பதிவு செய்த ஜனவரி 30 முதல் ஏப்ரல் 6 வரையிலான பதிவு செய்யப்பட்ட கோவிட் நோயாளிகளின் பயண வரலாறு, வசிக்கும் மாநிலம் மற்றும் நோய்த்தொற்றின் ஆரம்ப நிலை போன்றவற்றைப் பெறுவதற்கு, www.covid19india.org எனும் வலைத்தளத்தைப் பயன்படுத்தி உள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த காலகட்டத்தில் மொத்தம் 1,386 வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன.

இந்த தரவு பின்னர் சோஷியல் நெட்வொர்க் பகுப்பாய்வுக்கு (social network analysis) பயன்படுத்தப்பட்டது. கணிதத்தில், சோஷியல் நெட்வொர்க் பகுப்பாய்வு என்பது மக்கள் அல்லது பிற நிறுவனங்களுக்கிடையேயான இணைப்புகளை வரைபடமாக்குவதையும் அளவிடுவதையும் குறிக்கும்.

நெட்வொர்க்கில் உள்ள நோட்ஸ் (nodes) அல்லது அலகுகள் (units), மக்கள், குழுக்கள் அல்லது இணைப்புகள் இடையிலான முனைகளின்(Nodes) ஓட்டத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. முனைகளை இணைக்கும் கோடுகள், ‘விளிம்புகள் (edges)’ என்று அழைக்கப்படுகின்றன.

இந்த ஆய்வில், கெஃபி (Gephi) மென்பொருள் வழியாக சோஷியல் நெட்வொர்க் உருவாக்கப்பட்டுள்ளது. இது லூவைன் முறை (Louvain method) எனப்படும் ஒரு வழிமுறை முறையைப் பயன்படுத்துகிறது.

டிகிரி (degree), modularity மற்றும் மையத்தன்மை (centrality) போன்ற புள்ளிவிவர அளவுகள் மூலம் இந்த நெட்வொர்க்குகளை ஆராய்ச்சியாளர்கள் ஊகித்தனர்.

“கோவிட்-19-ன் பரவுதல் மற்றும் உலகளவிலிருந்து தேசிய மட்டத்திற்கான அதன் பரவலையும் நாங்கள் கண்டறிந்தோம். மேலும், இந்தியாவில் நோய் பரவுவதில் முக்கிய பங்கு வகித்த ஒரு சில ‘சூப்பர் ஸ்ப்ரெடர்களையும் (super spreaders)’ அடையாளம் கண்டோம்” என்று ஆசாத் பிடிஐ-க்கு தெரிவித்தார்.

ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தவை

தேர்ந்தெடுக்கப்பட்ட காலப்பகுதியில், பாதிக்கப்பட்ட நோயாளிகளில் பெரும்பாலோர் துபாய் மற்றும் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ளனர். இங்கிலாந்தில் இருந்து 18 வெவ்வேறு மாநிலங்களுக்கும், துபாயிலிருந்து 15 மாநிலங்களுக்கும் பயணித்துள்ளனர். பல்வேறு நாடுகளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சர்வதேச தொடர்புகள் கேரளாவில் இருந்துள்ளன.

இங்கிலாந்து மற்றும் துபாய் ஆகிய நாடுகள்தான், “இந்தியாவில் கோவிட்-19 பரவுவதற்கான முக்கிய ஆதாரங்கள்” என்று SNA கூறுகிறது. இந்த இரு நாடுகளிலிருந்தும் பல்வேறு இந்திய மாநிலங்களில் மிக உயர்ந்த இணைப்புகள் இருந்துள்ளன என்றும் அவைதான் முக்கிய “பரவல் புள்ளிகள்” என்றும் ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.

துபாயில் மிக உயர்ந்த eigenvector மையம் இருந்திருக்கிறது. அதாவது, சோஷியல் நெட்வொர்க்கில் மைய இடத்தைப் பிடித்துள்ளது. மறுபுறம், துபாயுடன் ஒப்பிடும்போது இங்கிலாந்திலிருந்துதான் இந்தியாவுக்குள் அதிகமான கிருமிகள் பரவியுள்ளன என்கிறார்கள்.

இந்தியாவுக்குள் கோவிட்

டெல்லி நிஜாமுதீனில் உள்ள மத சபையுடன் இணைக்கப்பட்ட தமிழ்நாடு, டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட modularity class பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்ட நோயாளிகள் வெளியில் நோயைப் பரப்புவதில் குறைவான பங்கைக் கொண்டுள்ளனர் என்பதையும் இந்த ஆய்வு முடிவு செய்தது.

மேலும், குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள், உள்ளூர் கிருமி பரிமாற்றத்தில் குறிப்பிடத்தக்கப் பங்கைக் கொண்டிருந்தன. அவற்றில் சில மாநிலங்களுக்கு இடையிலான பரவுதலுக்கும் காரணமாக அமைந்தன என்று பதிவு செய்திருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.