அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட மாடர்னா, ஃபைசர்/பயோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய மூன்று தடுப்பூசிகளும், ஒமிக்ரான் மாறுபாடுக்கு எதிராக போதுமான பாதுகாப்பை வழங்கவில்லை.அதே சமயம், தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் ஒமிக்ரானுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
Massachusetts General Hospital (MGH), Harvard மற்றும் MIT ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், வழக்கமான இரண்டு டோஸ் தடுப்பூசியின் செயல்திறனை பார்க்கையில் ஒமிக்ரானுக்கான நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படவது தெரியவந்துள்ளது. மாடர்னா மற்றும் ஃபைசர்/பயோஎன்டெக் தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களில் எடுக்க வேண்டும். அதே சமயம், ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி ஒரு டோஸ் மட்டும் தான். எவ்வாறாயினும், பூஸ்டர் டோஸ் செலுத்திகொண்டவர்களிடம் ஒமிக்ரானை எதிர்க்கும் நோய்எதிர்ப்பு சக்தி இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்க அரசின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி பாசி கூறுகையில், “தற்போதுள்ள தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ்கள் மற்ற வகைகளை விட சற்று பலவீனமாக இருந்தாலும், ஒமிக்ரான் மாறுபாட்டிற்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது.
தடுப்பூசி அனைவரும் கட்டாயம் போட வேண்டும். இந்த சூழ்நிலையில், ஒமிக்ரானுக்காக புதியதாக தடுப்பூசி தயாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் தடுப்பூசி போடாதிருந்தால், நிச்சயம் கடுமையாக பாதிக்கப்படுவீர்கள். டெல்டாவை காட்டிலும், ஒமிக்ரான் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார்.
இதற்கிடையில், இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி, ஒமிக்ரான் மாறுபாடின் அதிவேக பரவலால், நாட்டிற்கு கடுமையான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளார்.
இதுவரை இல்லாத வகையில், இங்கிலாந்தில் நேற்று மட்டும் சுமார் 78 ஆயிரத்து 160 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமிக்ரான் பாதிப்பு மட்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மேலும் அவர், வரவிருக்கும் நாட்களில் மக்கள் அதிகளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதால், சுகாதாரத் துறை தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளரா.
இங்கிலாந்து ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சியின் தலைவர் டாக்டர் ஜென்னி ஹாரிஸ் கூறுகையில், “தொற்றுநோய் ஆரம்ப காலத்திலிருந்து இருந்து ஒமிக்ரான் மாறுபாடு தான் மிக முக்கியமான அச்சுறுத்தலாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/explained/study-finds-protection-increases-with-booster-shots-384048/