செவ்வாய், 6 செப்டம்பர், 2022

தமிழக பள்ளி பாடப் புத்தகத்தில் புதிய சர்ச்சை

 

தமிழ்நாடு அரசின் 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சாவர்க்கர் குறித்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தற்போது உள்ள பள்ளி பாடத்திட்டம் முந்தைய அ.தி.மு.க ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. ஐ.ஏ.எஸ் அதிகாரி உதயச்சந்திரன் தலைமையிலான குழுவினர் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தை உருவாக்கினர். 2019 இல் உருவாக்கப்பட்ட பாடத்திட்டம் 2020 இல் திருத்தம் செய்யப்பட்டது. தற்போது 2022 இலும் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தநிலையில், 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் வேலூர் புரட்சி பற்றிய சாவர்க்கரின் கருத்துக்கள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில், ‘மக்கள் புரட்சி’ என்ற பாடத்தில், ‘வேலுார் கலகம்’ என்ற தலைப்பில், பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதில், ‘வெள்ளையர்களை எதிர்த்து, 1806ல் நடந்த வேலுார் கலகமானது, 1857ல் நடந்த, முதல் இந்திய சுதந்திர போரின் முன்னோடி என, வி.டி.சாவர்க்கர் என்ற வரலாற்றாசிரியர் குறிப்பிடுகிறார்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே பாடத்தில், ‘பெரும் புரட்சி’ என்ற பெயரில், சிப்பாய் கலகம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும், சாவர்க்கர் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. ‘சிப்பாய் கலகம் என்ற பெரும் புரட்சி, நவீன தேசிய இயக்கம் தோன்ற காரணமாக இருந்தது. 1857ஆம் ஆண்டு நடந்த பெரும் புரட்சி, இருபதாம் நுாற்றாண்டின் தொடக்கமாக இருந்தது. ‘வி.டி.சாவர்க்கர் எழுதிய, முதல் இந்திய சுதந்திரப் போர் என்ற நூலில், பெரும் புரட்சியை, ஒரு திட்டமிடப்பட்ட தேசிய சுதந்திரப் போர் என விவரிக்கிறார்’ என்று கூறப்பட்டுள்ளது.

இப்படியாக இடம்பெற்றுள்ள சாவர்க்கர் குறித்த பதிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாவர்க்கர் குறித்து தமிழகத்தில் இருவேறு கருத்துக்கள் இருந்து வரும் நிலையில், பள்ளி பாடப்புத்தகங்களிலே அவர் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருப்பது சரியல்ல என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில், கர்நாடகா பள்ளி பாடப்புத்தகத்தில் சாவர்க்கர் குறித்த பதிவுகள் சர்ச்சையானது. அதில் சாவர்க்கர் அந்தமான் சிறையில் புல் புல் பறவை மீது அமர்ந்து தாய்நாட்டிற்குச் சென்று வருவார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவுகள் சர்ச்சையான நிலையில், தற்போது தமிழக பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பதிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

source https://tamil.indianexpress.com/education-jobs/rss-leader-savarkar-name-in-tamilnadu-schools-books-create-controversy-505558/

Related Posts: